பேரரசர் அக்பர்

பேரரசர் அக்பர் இந்தியாவை சிறப்பாக ஆட்சி செய்த மன்னர்களுள் ஒருவர். முகலாய அரசர்களில் மூன்றாவதாக இந்தியாவை ஆட்சி செய்தவர். முகலாயப் பேரரசு மன்னர்களுள் மிகவும் புகழ் பெற்றவர்.
இவரின் போர்திறன், ஆட்சிமுறை, நிர்வாகத்திறன், மதசகிப்புத்தன்மை, கட்டிடக் கலை ஆகியவற்றிற்காக வரலாற்றில் நீங்கா இடம் பெற்றார்.
இவர் மாமன்னர் மற்றும் பேரரசர் என்றெல்லாம் வரலாற்று ஆகிரியர்களால் புகழப்படுகிறார்.
அக்பர் சிறந்த போர் வீரர் மற்றும் கலைஞர் ஆவார். அவர் போர்கருவிகளை கலைநுணுக்கத்துடன் சேகரித்து வைத்திருந்ததோடு அவற்றை பயன்படுத்தும்  விதத்தையும் தெரிந்து வைத்திருந்தார். மேலும் தச்சு வேலைகள், கொல்லர் வேலைகளையும் தெரிந்து வைத்திருந்தார்.
மேலும் விலங்குகளை பயிற்றுவிக்கும் திறனையும் பெற்றிருந்தார். இசை, இலக்கியம், கட்டிடக் கலையில் ஆர்வம் மிக்கவராய் விளங்கினார். பதேபூர் சிக்ரி, புல்ந்-தார்வாசா, ஜோத்பாய் அரண்மனை போன்றவை அவரின் கட்டிடக் கலையை பறைசாற்றுகின்றன.
அவர் இந்து, சீக்கிய மற்றும் கிருத்துவ மக்களை மத சகிப்பு தன்மையுடன் நடத்தினார். தீபாவளி, ஹோலி போன்ற பண்டிகைகளை அரண்மனையில் கொண்டாட ஏற்பாடு செய்தார்.
இராஜபுத்திர பெண்களை மணந்து இந்துகளின் நட்புறவைப் பெற்றார். தீன் இலாஹி என்ற மதத்தினை உருவாக்கினார். இம்மதத்திற்கான கோட்பாடுகளையும் வகுத்தார். அக்பர் நாமா, அகினி அக்பரி ஆகியவை அவர் காலத்தில் எழுதப்பட்ட புகழ் பெற்ற நூல்கள் ஆகும்.
உலக வரலாற்றில் சிறந்த அரசராகப் போற்றப்படும் மாமன்னர் அக்பர் பற்றிப் பார்ப்போம்.

அக்பரின் இளமைக்காலம்

ஜலாலுதீன் முகமது அக்பர் என்பது இவரது முழுப் பெயராகும். இவர் சிந்து மாகாணத்தின் (தற்போது பாகிஸ்தானில் உள்ளது) ராஜபுத்திரக் கோட்டையான அமரக்கோட்டையில் 15.10.1542-ல் பிறந்தார்.
இவரது பெற்றோர் நசுருதீன் ஹுமாயூன் மற்றும் ஹமிதா பானு ஆவர். இவர் பிறக்கும்போது இவரது தந்தை ஹுமாயூன் தனது நாட்டினை இழந்து அமரக் கோட்டையில் தஞ்சம் புகுந்திருந்தார்.
1540-ல் ஹுமாயூன் மற்றும் அவரது மனைவி ஹமிதா ஆப்கான் தலைவனான ஷெர்ஷாவால் கட்டாயமாக நாடு கடத்தப்பட்டனர். இதனால்தான் அக்பர் அமரக்கோட்டையில் பிறக்க நேர்ந்தது. பின் அங்கிருந்து ஹுமாயூன் தன் மனைவியுடன் பெர்சியாவிற்கு சென்று விட்டார்.
அவர் இளமைகாலத்தில் தனது மாமன் அஸ்காரியின் பாதுகாப்பில் ஆப்கானிஸ்தானில் வளர்ந்தார். அவர் இளமையில் வேட்டையாடுதல், ஓடுதல், போரிடுதல் போன்ற தனித்திறன்களை வளர்த்துக் கொண்டார். ஆனால் எழுதவும், படிக்கவும் கற்றுக் கொள்ளவில்லை.
அவர் தனது வாழ்நாள் முழுவதும் தத்துவம், அறிவியல், மதம், வரலாறு பற்றி பிறரைப் படிக்கச் சொல்லி அதனை மனதில் நிறுத்திக் கொண்டார். முகலாய அரசர்களில் படிக்காதவர் அரசர் அக்பர் மட்டுமே ஆவார்.

அரசராதல்

1555-ல் ஹுமாயூன் டெல்லியை மீண்டும் கைபற்றினார். சில மாதங்களிலேயே ஹுமாயூன் எதிர்பாராமல் இறந்து விட்டார். அக்பர் தனது பதின்மூன்றாம் வயதில் தனது தந்தையின் தளபதியான பைராம்கான் என்பவரால் மன்னராக முடிசூடப்பட்டார்.

அக்பரின் வெற்றிகள்

அக்பர் ஷெர்ஷா பரம்பரையினரான சிக்கந்தர்ஷாவை தோற்கடிக்க எண்ணி பஞ்சாப்பில் சிக்கந்தர்ஷாவின் படையினரோடு போரிட்டார். இதுவே அக்பரின் முதல் போராகும்.
வங்காளத்தை ஆண்ட முகம்மதுஷாவின் பிரதமந்திரியாக இருந்த ஹெமு அக்பரைத் தோற்கடித்து டெல்லியைக் கைபற்ற எண்ணினார்.
அக்பருக்கும் ஹெமுவுக்கும் டெல்லியின் அருகே பானிபட் என்ற இடத்தில் 1556-ல் போர் ஏற்பட்டது. இப்போர் வரலாற்றில் இரண்டாம் பானிபட் போர் எனப்புகழ் பெற்றது.
இப்போரில் வீரத்துடன் யானை மேல் இருந்து போர் புரிந்த ஹெமுவின் கண்ணில் அம்பு பாய்ந்தது. இதனால் போரில் அக்பரால் ஹெமு தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டார். இவ்வெற்றின் மூலம் டெல்லி மற்றும் ஆக்ராவில் முகலாய ஆட்சி மீண்டும் நிலைநாட்டப்பட்டது.
பின் சுமார் நான்கு ஆண்டுகள் பைராம்கான் அக்பரின் சார்பில் ஆட்சி நடத்தினார். அக்பர் உண்மையான ஆட்சியாளராக விரும்பினார். எனவே பைராம்கானை ஆட்சியை விட்டுவிட்டு புனிதயாத்திரை செல்ல வலியுறுத்தினார்.  புனித யாத்திரை செல்லும் வழியில் பைராம்கான் கொல்லப்பட்டார்.
அதன்பின் அக்பரின் வளர்ப்புத்தாய் மாகம்அனகா இரண்டு ஆண்டுகள் நிர்வாகத்தைக் கட்டுப்படுத்தினார். இக்காலம் “அந்தப்புர அரசாங்க காலம்” என்று அழைக்கப்படுகிறது.
மாகம்அனகா தனது மகன் ஆதம்கானை அரசராக்க எண்ணினார். இதனை அறித்த அக்பர் ஆதம்கானை கொலை செய்தார். இதனால் மாகம்அனகா மனம் வருந்தி உயிர் துறந்தார். பின் அக்பர் ஆட்சிப் பொறுப்பை நேரடியாக ஏற்றார்.

அக்பரின் பிற வெற்றிகள்

அக்பரின் மேலாண்மையை ஏற்று ஜெய்ப்பூரை ஆண்ட பிகாரிமால் தனது மகளான ஜோத் பாயை அரசருக்கு மணம் முடித்த வைத்தார். இம்மணம் மூலம் ஜஹாங்கீர் பிறந்தார்.
பின்னர் அக்பர் மாளவம் மற்றும் சூனாரை இணைத்துக் கொண்டார். இராஜபுத்திர ஆளுமைக்குட்பட்ட கோண்டுவானாவை இராணி துர்காவதியைத் தோற்கடித்து கைபற்றினார். பின்னர் பிக்கனீர், ஜெய்சல்மார் மற்றும் ஜோத்பூரை வெற்றி கொண்டார்.
அக்பரின் பேரரசு மேற்கே ஆப்கானிஸ்தான் முதல் கிழக்கே வங்காளம் வரையிலும் வடக்கே இமயம் முதல் தெற்கே கோல்கொண்டா வரை பரவியிருந்தது.
தக்காணத்தில் தனது பேரரசை விரிவுபடுத்த எண்ணினார். போர்த்துக்கீசியர்களின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தவும், தக்காணத்தைக் கைபற்றவும் தக்காணத்தின் மீது போர் தொடுத்தார்.
அகமது நகரை ஆண்ட சாந்த்பீவியைத் தோற்கடித்து அந்நகரை தனது பேரரசுடன் இணைத்துக் கொண்டார். மேலும் பீரார், காந்தேஷ் ஆகிய இடங்களையும் கைபற்றினார்.

அக்பரின் இராஜபுத்திரக் கொள்கை

அக்பர் இராஜபுத்திரர்களோடு நட்பு பாராட்டினார். ஜெய்ப்பூர், பிக்கனீர், ஜெய்சால்மார் இளவரசிகளை மணந்து கொண்டார். இராஜபுத்திர அறிஞர்களை அரசின் உயர் பதவியில் நியமனம் செய்தார்.
இராஜாமான்சிங், இராஜா தோடர் மால், பீர்பால், இராஜபகவான் தாஸ் போன்ற இந்துக்களை உயர் பதவியில் அமர்த்தினார். முஸ்லீம் அல்லாதோர்களின் மீதான ஜிசியா மற்றும் புனித பயண வரிகளை நீக்கி அவர்களின் நல்லாதரவைப் பெற்றார்.
இந்துப் பெண்களை மணந்த போதிலும் அவர்களை கட்டாய மதம் மாற்றம் செய்ய முயற்சிக்கவில்லை. அவரவர் மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளித்தார். எல்லோரிடமும் மதசகிப்புத்தன்மையை வெளிப்படுத்தினார்.

இலக்கியப்பணி

அக்பர் கல்வி அறிவு முறையாக பெறாவதவராக இருந்தபோதிலும் சிறந்த அறிஞர்களை ஆதரித்தார். இவரின் அவையில் இருந்த இராஜா தோடர்மால் பகவத்கீதையை அரேபிய மொழியில் மொழிபெயர்த்தார்.
அபுல்பாசல் மற்றும் அவரின் சகோதரர் அபுல் பைசி பல வடமொழி நூல்களை பாரசீக மொழியில் மொழி பெயர்த்தனர். அபுல் பாசல் அக்பர் நாமா, அயினி அக்பரி போன்ற வரலாற்ற புகழிமிக்க நூல்களை எழுதினார்.
அபுல் பைசி இராமாணயம், மகாபாரதம் போன்ற இதிகாச நூல்களை பாரசீக மொழியில் மொழி பெயர்த்தார். சிறந்த இசைஞானியான தான்சேன் அக்பரின் அவையை அலங்கரித்தார்.

அக்பரின் நிலவரி சீர்திருத்தம்

நிலவரி சீர்திருத்தத்தை பொறுத்தவரையில் அக்பர் ஷெர்ஷாவின் முறையைப் பின்பற்றினார். இராஜா தோடர்மால் அக்பரின் வருவாய்துறை அமைச்சராக செயல்பட்டார்.
நிலம் முறையாக அளவீடு செய்யப்பட்டு விளைச்சலில் 1/3 பங்கு வரியாக வசூலிக்கப்பட்டது. விவசாயிகள் பணமாகவோ அல்லது தானியமாகவோ வரியைச் செலுத்தலாம்.
விவசாயத்தைப் பெருக்க கடனுதவி வழங்கப்பட்டது. விவசாயிகளுக்கு நிலஉரிமைப் பட்டா வழங்கப்பட்டது. விவசாயிகளும் அரசாங்கமும் நிலவரி தொடர்பான ஒப்பந்தத்தை செய்து கொண்டனர்.

மன்சப்தாரிமுறை

மான்சப்தாரி முறை முகலாயரின் இராணுவம் மற்றும் பொதுநிர்வாக முறைக்கு அடிப்படையாக அமைந்தது. பாரசீக நாட்டில் பின்பற்றப்பட்ட இம்முறையை அக்பரது ஆட்சியில் அறிமுகப்படுத்தினார்.
மன்சப் என்றால் தரம் அல்லது தகுதி என்று பொருள். மன்சப்தார்கள் பேரரசிற்கு உதவிட தாங்களே போர்வீரர்களை தெரிவு செய்து கொண்டனர். இம்முறை அக்பரின் காலத்தில் சிறப்புற செயல்பட்டது. பின் காலஓட்டத்தில் சிதைவுற்றது.

கலை, கட்டடக்கலை

அக்பரின் காலத்தில் கலை, கட்டக்கலை சிறப்புற வளர்ச்சியடைந்தது. அக்பர் பதேபூர்சிக்ரியை, குஜராத் வெற்றியின் காரணமாக கட்டினார். புலந்-தார்வாசா என்ற நுழைவுவாயில் மிகச்சிறந்த கட்டிடக்கலைக்கு உதாரணமாகும்.
அக்பரி மஹால், ஜகாங்கரி மஹால், பஞ்ச் மஹால், ஜோத்பாய் அரண்மனை போன்றவற்றை அழகுற சிவப்புக் பளிங்கு கற்களால் கட்டிமுடித்தார்.

அக்பரின் சமயக்கொள்கை

அக்பரே மதசகிப்புத்தன்மை கொண்ட மிகச்சிறந்த இஸ்லாமிய மன்னராவார். அக்பரின் தந்தை சன்னி முஸ்லிம் பிரிவைச் கார்ந்தவர். தாயார் ஷியாப் பிரிவைச் சார்ந்தவர். அக்பரின் பாதுகாவலர் பைராம்கான் ஷியாப்பிரிவைச் சார்ந்தவர்.
அக்பரின் ஆசிரியர் ஷேக்முபாரக் ஒரு மிதவாதி. அவரும் ஷியாப் பிரிவைச் சார்ந்தவர். இவையாவும் அக்பர் சமயத்தில் மிதவாதியாகத் திகழ முக்கிய காரணங்களாக அமைந்தன.
கிபி 1575-ல் இவர் இபாதத் கானா என்ற தொழுகை இல்லத்தைக் கட்டி பல்வேறு மதத்தலைவர்களை அழைத்து சமயத்தின் நற்கூறுகளை ஆய்வு செய்தார்.
அதனடிப்படையில் தவறுபடா ஆணையினை பிரகடனப்படுத்தினார். இதன்படி இவர் தன்னை சமயத்தலைவராகவும், அரசராகவும் அறிவித்துக் கொண்டார்.
கிபி 1582-ல் தீன்இலாஹி அல்லது தெய்வீக மதத்தினை உண்டாக்கினார். இதன் முக்கியக் கோட்பாடு பூரண சகிப்பத்தன்மையை அடிப்படையாகக் கொண்ட தேசிய சமயத்தை உருவாக்குவதாகும்.
இச்சமயம் அனைத்த சமயங்களின் முக்கியக் கோட்பாடுகளை உள்ளடக்கியதாகும். அக்பர் தான் உருவாக்கிய சமயத்தை எல்லோரும் கடைப்பிடிக்க வலியுறுத்தவில்லை. எனவே இவர் மறைந்தபோது இவரின் சமயமும் மறைந்து போனது.
சுமார் 49 ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி செய்த அக்பர் கிபி1605-ல் உடல்நலமின்மை காரணமாக மறைந்தார்.
அக்பரே முகலாயப் பேரரசை உண்மையாக நிலைநாட்டியவராகக் கருதப்படுகிறார்.
பன்முகம் கொண்ட சிறப்பான‌ பேரரசராக ஆட்சி செய்த அக்பர் இந்திய வரலாற்றில் தனக்கென ஓரிடத்தைப் பெற்றுள்ளார்.