மனிதர்களின் உடலுக்குள் முட்டையிடும் பூச்சி...
உடலைத் துளைத்து
வெளியேறும் புழு!
இனப்பெருக்கத்திற்காக ஒவ்வோர் உயிரினமும் முட்டையிட்டு, அடைக்காத்து தங்களின் அடுத்தத் தலைமுறையை உருவாக்குகின்றன. முட்டையிட்டு அதைப் பாதுகாக்க ஓர் இடம் தேடி, அதற்கு ஒரு கூட்டை வடிவமைத்து, அடைகாத்து உயிரைக் காப்பாற்றுவது வரை பல போராட்டங்களை முன்னெடுக்கின்றன. பூச்சிகளில் ஆரம்பித்து பறவைகள் வரை முட்டைகளைப் பாதுகாக்க பல தந்திரங்களைக் கையாளுகின்றன.
ஊசிவால் குளவி
ஊசிவால் குளவிகள் தங்கள் முட்டைகளைத் தரையில் இடுகின்றன. ஆனால், சில ஊசிவால் குளவிகள் மட்கிப்போன மரங்களின் மேற்பரப்பில் பறந்து மரத்தின் உள்ளே இருக்கும் பூச்சிகளின் உடலில் தமது நீண்ட ஊசிபோன்ற நீட்சியின் உதவியால் முட்டையிடும். குளவி ஒரு புழுவைப் பிடித்தவுடன் தனது கொடுக்கால் கொட்டி விடும். புழு சாவதற்கு பதிலாக மயக்க நிலைக்குச் சென்று விடும். மயக்க நிலையில் உயிரோடு இருக்கும் புழுவுக்குள் தன் முட்டைகளை இடும். புழுவுக்குள் இருக்கிற குளவியின் முட்டை வளர ஆரம்பிக்கும். குறிப்பிட்ட வளர்ச்சி அடைந்ததும் முட்டையிலிருந்து வெளிவருகிற குளவி புழுவின் உடலைக் கொஞ்சம் கொஞ்சமாக உண்டு பிறகு வெளியேறும். இப்படித்தான் ஊசிவால் குளவிகள் தங்கள் இனத்தை உற்பத்தி செய்துகொள்கின்றன.
பாட் ப்ளை (botfly)
இவ்வகை ஈக்கள் முட்டை இடுவதற்கு விலங்குகள் மற்றும் மனிதர்களின் உடல்களைத் தேர்ந்தெடுக்கின்றன. உடலின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தன் ஊசி போன்ற நீட்சி வழியாக தன்னுடைய முட்டைகளைச் செலுத்தும். செலுத்தப்பட்ட முட்டை உடலின் சூட்டில் பொறிக்க ஆரம்பிக்கும். நாற்பது நாள்களில் முட்டையிலிருந்து வெளி வருகிற புழு தான் தாங்கியிருக்கிற உடலைத் துளையிட்டு வெளியேறும். இப்படியான பல சம்பவங்கள் இப்போதும் மத்திய தெற்கு அமெரிக்காவில் இருக்கிற மனிதர்களுக்கு நிகழ்ந்திருக்கிறது. தலை வலிக்கிறது என மருத்துவமனைக்கு வந்த பலரும் பாட்ப்ளை ஈக்களின்வாரிசுகளைச் சுமந்து
கொண்டிருந்திருக்கிறார்கள்.
சில்வண்டு
இந்தியக்காடுகளில் காணப்படுகிற ஒரு வகை பூச்சி இனம் சிகாடா; தமிழில் சில்வண்டு. இரவு நேரங்களில் காடுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கும் இவ்வகை பூச்சி மரப்பொந்துகளில் முட்டையிடுகின்றன. 45 நாள்களில் முட்டையிலிருந்து வெளிவருகிற சில்வண்டு குட்டிகள் மண்ணுக்குள் போய்விடுகின்றன. மண்ணுக்குள் போகிற சில்வண்டுகள் உடனே பூமிக்கு மேல் வருவதில்லை. கிட்டத்தட்ட 13 இருந்து 17 ஆண்டுகள் வரை மண்ணுக்குள் இருந்து விட்டு பிறகே பூமியின் தரைப்பரப்பிற்கு வருகின்றன. வருகின்ற சில்வண்டுகள் முழு வளர்சிதை மாற்றத்தை அடைகின்றன. தன்னுடைய மேலுறையைக் கழட்டி விடுகிற சில்வண்டுகள் புது உருவத்தைப் பெறுகின்றன. பூமிக்கு மேல் இருக்கிற காலத்தில் இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. இணை சேர, ஆண் பூச்சிகள் பெண் பூச்சிகளைக் கவர்வதற்காக இந்த ஓசையை எழுப்புகின்றன. இணைசேரும் காலம் முடிந்ததும், பெண்சில்வண்டு மரப்பொந்தில் சென்று முட்டையிடும். இணை சேர்ந்த மூன்று வாரங்கள் கழித்து ஆண் சில்வண்டு இறந்து விடுகிறது.
கடல் குதிரை
உலகிலேயே ஆண் கடற்குதிரைகள்தான் முட்டைகளைச் சுமந்து தன் இனத்தைப் பிரசுவிக்கிறது. பெண் கடற்குதிரைகள் தங்களின் முட்டைகளை (சுமார் 200) ஆண்களின் வால்பகுதியில் உள்ள இனப்பெருக்கப் பைகளில் வைத்து விடுகின்றன. அதை ஆண் கடற்குதிரைகள் கங்காரு போல நன்கு பேணி, ஆறு வாரங்கள் பாதுகாத்துக் குஞ்சுகளாகப் பொரிக்கின்றன. குஞ்சுகளின் எண்ணிக்கையும் 50 முதல் 100 வரை இருக்கும்.
பட்டுப் பூச்சி
பட்டுப் பூச்சிகள் இலைகளின் பின் புறத்தில் முட்டைகளை இடுகின்றன. முட்டைகளிலிருந்து வெளியே வருகிற கம்பளிப் பூச்சிகள் பிறந்த இலைகளை உண்டே தங்களின் வாழ்க்கையை ஆரம்பிக்கின்றன. ஒரு கட்டத்தில் இருக்கிற மரக்கிளைகளிலோ இலைகளிலோ தங்களின் அடுத்தப் பிறவியை அடைய எச்சிலிலிருந்து வரக்கூடிய ஒரு வகை திரவத்தைப் பயன்படுத்திக் கூடு கட்டுகின்றன. கூட்டுக்குள் போகிற புழு பட்டாம்பூச்சியாக பரிணமிக்கிறது. அதற்கான இயற்கை வேலைப்பாடுகள் நிகழ ஆரம்பிக்கின்றன. பதினைந்து நாள்கள் கழித்து பட்டாம் பூச்சிக் கூட்டை விட்டு வெளியே வருகிறது. மீண்டும் அதே முட்டையிடும் படலம் எனச் சுழற்சி முறையில் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறது.
ஓர் உயிருக்குத் தெரியாமல் அதற்குள் ஒரு முட்டையை ஒளித்து வைக்கும் இயற்கை விந்தைதான். ஒவ்வோர் உயிரும் தன் அடுத்த தலைமுறையைக் காப்பாற்றிக் கொள்ள விநோதங்கள் புரிவதெல்லாம் விந்தையிலும் விந்தை.
மனிதர்களின் உடலுக்குள் முட்டையிடும் பூச்சி...
உடலைத் துளைத்து
வெளியேறும் புழு!
ஊசிவால் குளவி
பாட் ப்ளை (botfly)
சில்வண்டு
பட்டுப் பூச்சி
கடல் குதிரை
மனிதர்களின் உடலுக்குள் முட்டையிடும் பூச்சி...
Reviewed by Bright Zoom
on
February 28, 2019
Rating:
No comments: