அரசுக்கும், முதல்வருக்கும் ஆலோசனை வழங்க முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனை குழு அமைப்பு: தமிழக அரசு ஆணை வெளியீடு
சென்னை: அரசிற்கு தகுந்த ஆலோசனைகளை வழங்கிட ‘முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு’வை அமைத்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:கொரோனா தொற்று தாக்கத்தால் தமிழகத்தின் பொருளாதாரத்தில் கடுமையான சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாய் மற்றும் நிதி பற்றாக்குறை, அதிக அளவிலான கடன் ஆகியவை தொடர்ந்து ஆபத்தான நிலையை ஏற்படுத்திவருகிறது. அதே நேரத்தில் மக்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பொருளாதாரம், சமூக நீதி, சமநிலை ஆகியவற்றில் தமிழக அரசு விரைந்து வளர்ச்சியை எட்டிவிடும் என்று மக்கள் பெரிதும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இந்த வகையில், சர்வதேச அளவிலான பொருளாதார நிபுணர்கள், தமிழகத்தில் உள்ள பொருளாதார, சமூக, அரசியல் நிபுணர்களின் ஆலோசனை தமிழகத்திற்கு தேவையாக உள்ளது. எனவே,”முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனை குழு” ஒன்றை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த குழுவில் பேராசிரியர் எஸ்தர் டஃப்லோ (அமெரிக்காவின் மசாசூட் தொழில்நுட்ப மையத்தின் வறுமை ஒழிப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி துறை), ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் பேராசிரியர் ரகுராம் ராஜன், மத்திய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் டாக்டர் அர்விந்த் சுப்பிரமணியன், ராஞ்சி பல்கலைக்கழகத்தின் பொருளாதார வளர்ச்சி துறை கவுரவ பேராசிரியர் ஜீன் டிரெஸ், பிரதம மந்திரியின் முன்னாள் பொருளாதார ஆலோசகர் மற்றும் தமிழக முன்னாள் செயலாளர் டாக்டர் எஸ்.நாராயண் ஆகியோர் இடம்பெறுகிறார்கள்.
இந்த குழு பொருளாதார, சமூக நீதி மற்றும் அரசியல் ஆகியவை குறித்த வழிகாட்டுதல்களையும், மனிதவள மேம்பாடு தொடர்பான விஷயங்களையும் குறிப்பாக பெண்கள் மற்றும் உரிமை குறைவான மக்களுக்கு சம வாய்ப்பு ஆகியவைகுறித்து ஆலோசனை வழங்கும். * பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்துதல், வேலைவாய்ப்பு, மாநிலத்தின் உற்பத்தி திறன் ஆகியவை குறித்து அரசுக்கு கருத்துகளை தெரிவிக்கும். * மாநிலத்தின் ஒட்டுமொத்த நிதி வளம் குறித்து அரசுக்கு வழிகாட்டுதல்களை தரும். * மக்களுக்கான சேவையை மேன்மைப்படுத்துவது குறித்து குழு ஆலோசனை வழங்கும். * விட்டுக்கொடுக்காததால் ஏற்படும் பிரச்னைகளை தீர்ப்பதற்கான வாய்ப்புள்ள புதிய ஆலோசனைகளை அரசுக்கு வழங்கும். * பொருளாதாரம் மற்றும் சமூக கொள்கைகள் மீது ஆய்வு செய்து முதலமைச்சர் அல்லது நிதி அமைச்சர் மற்றும் மனித வள மேலாண்மை அமைச்சருக்கு ஆலோசனைகளை வழங்கும். * இந்த குழு அடிக்கடி நேரடியாகவோ அல்லது வீடியோ கான்பரன்ஸ் மூலமாகவோ கூடும். * குழுவின் செயல்பாடுகள் குறித்து அந்த குழுவே முடிவு செய்யும். * முதலமைச்சர் மற்றும் தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கையின் அடிப்படையில் முன்கூட்டியே ஆலோசனைகளை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலமைச்சரோ அல்லது நிதி அமைச்சரோ கோரிக்கை வைக்கும்போது தனிப்பட்ட உறுப்பினரோ அல்லது கவுன்சிலோ ஆலோசனைகளை வழங்க வேண்டும். குழுவின் முடிவுகள் கொள்கை அடிப்படையிலோ அல்லது வாய்மொழி ஆலோசனையாகவோ இருக்கும்.
முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனை குழு அமைப்பு:
Reviewed by Bright Zoom
on
June 22, 2021
Rating: 5
No comments: