அரிதாகி வரும் மண்பாண்ட பொருட்கள்...!!
Pottery items that are becoming rare...!!
Bright Zoom,
மறந்து விட்டோம்.. நோயின்றி நீண்ட நாட்கள் வாழ வைத்த பொருளையே மறந்து விட்டோம்..!!
🧉 நம்முடைய பாட்டி காலத்தில், தண்ணீர் பானையில் இருந்து சாப்பிடக்கூடிய தட்டு வரைக்கும் அனைத்துமே மண் சார்ந்த பொருட்களாக தான் இருந்தது. அடுத்த தலைமுறையினர் ஈய பாத்திரங்களை பயன்படுத்தினர். பின் சில்வர் பாத்திரங்களை பயன்படுத்தினர்.
🧉 ஆனால் தற்போது பீங்கான், நான்ஸ்டிக் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துகின்றனர். என்ன தான் வகைவகையான பாத்திரங்கள் இருந்தாலும் மண்பானை என்றால் தனி பிரியம் தான். வெயில் காலம் வந்தாலே மண்பானையை பலரும் தேடுகின்றனர்.
🧉 அந்த வகையில் இன்று அனைவருக்கும் பிடித்தமான மண்பாண்ட பொருட்களை பற்றி பார்க்கலாம் வாங்க...
மண்பாண்ட பொருட்களின் முக்கியத்துவம் :
🧉 மண்பாண்ட பொருட்களை களிமண்ணால் செய்கின்றனர். இந்த மண்பாண்ட பொருட்களில் உள்ள காரத்தன்மை அதில் தயாரிக்கப்படும் உணவுகளின் pH அளவை சரியாக வைத்திருக்கும்.
🧉 இப்பொருட்களில் உள்ள இரும்புச்சத்து, பாஸ்பரஸ், கால்சியம் போன்றவை சமைக்கும் உணவு பொருட்களில் கலந்து நமக்கு கிடைக்கும். மேலும் உணவின் சுவை அதிகரிக்கும், உடல் சூட்டை குறைக்கும், இரத்த குழாய் சீராகும் என்று மண்பானையின் மகத்துவத்தை சொல்லி கொண்டே இருக்கலாம்.
🧉 மண்பாண்ட பொருட்களை கொண்டு சமைக்கும்போது உணவில் வெப்பம் சம அளவு பரவி சீராக இருக்கும். அதாவது, களிமண் கொண்டு செய்யும் பொருட்களானது உலோகங்கள் போல் அல்லாமல் வெப்பத்தை எதிர்க்கின்றன. இதனால் உணவு மெதுவாக சமைக்கப்படுகிறது.
🧉 ஆகையால் உணவின் தன்மை மாறாமல் மொத்த சத்துக்களும் நமக்கு கிடைக்கும். மேலும் இதில் சமைக்கும்போது சிறிதளவு எண்ணெயை பயன்படுத்தினாலே போதுமானது.
மண்பாண்டத்தில் முதன்முதலாக சமைப்பவர்களின் கவனத்திற்கு :
🧉 முதன்முதலாக மண்பாண்டத்தில் சமைப்பவர்கள் அதை முதலில் நன்றாக கழுவி எடுத்து கொள்ள வேண்டும். பின் தண்ணீரில் ஒருநாள் இரவு முழுவதும் மூழ்கி இருக்கும்படி வைக்கவும். பின் வெயிலில் சில மணி நேரம் காய வைத்து எடுத்து கொள்ளவும்.

🧉 அதற்கு பிறகு எண்ணையை தடவி சிறிது நேரம் அப்படியே வைக்கவும். பின் அரிசி வடிகட்டிய நீர் அல்லது சாதம் வடிகட்டிய கஞ்சியை அந்த மண் சட்டி நிறையும் வரை ஊற்றி அடுப்பில் வைக்க வேண்டும்.
🧉 அவ்வாறு அடுப்பில் வைக்கும்போது மிதமான தீயிலே வைக்க வேண்டும். அவை நன்கு கொதித்த பின் அடுப்பை அணைத்து விடலாம்.
🧉 எதற்காக இவ்வாறு செய்கின்றோம் என்றால், மண் சட்டியில் நுண் துளைகள் இருக்கும். அதை போக்க தான் மேற்கண்ட முறைகளை செய்கின்றோம்.
🧉 தற்போது பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை ஏற்பட்டுள்ளதால் வாழை இலை, பாக்கு மட்டை தட்டுகள் என இயற்கையான பொருட்களை உபயோகிக்க தொடங்கி உள்ளோம். வீட்டிலும் முடிந்தவரை மற்ற பொருட்களை கொண்டு சமைப்பதை விட மண்பாண்ட பொருட்களை கொண்டு சமைத்து நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ்வோம்...!

No comments: