வேலூர்க் கோட்டை தெரிந்த
தெரியாத பல பொக்கிஷத் தகவள்கள்...!
வெயிலூர் என்றும்...!
வேலூர் என்றும்...!
அழைக்கப்படும்.
தென்னிந்தியாவின் மிக வெப்பமான நகரம் வேலூரை.
சுற்றிலும் கிழக்கு மலைத் தொடர்களால் சூழப்பட்டுள்ள நகரம். தமிழகத்தின் ஏழாவது பெரிய மாநகரம். மிகப் பெரும் சிறைச்சாலைகளைக் கொண்ட நகரம். தெற்காசியாவின் மிகப்பெரும் மருத்துவமனை உடைய நகரம். ஒரு மாநகராட்சியையும், ஆறு நகராட்சிகளையும் சுமார் 1 இலட்சம் மக்கள் தொகையையும் கொண்ட நகரம்.
தோல் பொருட்கள் உற்பத்தியில் இந்திய அளவில் முதலிடத்தையும், உலக அளவில் இரண்டாமிடத்தையும் பெற்ற நகரம்.
ஒரே ஊரில் மூன்று மலைக் கோட்டைகளையும் ஒரு தரைக் கோட்டையையும் உடைய நகரம். இது மட்டும்தானா?
வானளாவிய கற்களாலான மதிற்சுவர்கள். கண்களை மலைக்க வைக்கும் சுற்றளவு.
ஒரு கோட்டைக்குள் மற்றொரு கோட்டை போல் மூன்று கொத்தளங்கள்.
பல நூற்றாண்டு காலமாக அசையாமல் நிற்கும் உறுதி.
பல போர்களைக் கண்டு சளைத்து போன மனம்.
இப்படியெல்லாம் இருப்பது வேலூர் மாநகரம் ஒன்றுதான்.
வேலூர்க் கோட்டை
திம்மி ரெட்டி, பொம்மி ரெட்டி சகோதரர்களால் பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதியில் கட்டப்பட்ட வேலூர் கோட்டைதான் அது.
தென்னிந்தியாவிலேயே மிகச் சிறந்த போர் அரண்களுடன் கட்டப்பட்ட கோட்டை இது.
விஜயநகரப் பேரரசின் வேலூர் மண்டலப் பகுதிகளுக்கான பாதுகாப்பு அரணாக இது வேலூரில் கட்டப்பட்டது.
அது மட்டுமல்ல. ராட்சசி - தங்கடிப் போரில் அதாவது தலைக்கோட்டைப் போரில் விஜயநகரம் வீழ்ந்த பின் அப்பேரரசின் அரசர்கள் முறையே தங்கள் தலைநகர்களை பெனுகொண்டா, சந்திரகிரி மற்றும் வேலூரில் அமைத்துக் கொண்டனர்.
இக்கோட்டை சுமார் நூறாண்டு காலம், பேரரசின் இறுதி அரசரான மூன்றாம் அரங்கனின் காலம் வரை தலைநகரக் கோட்டையாக இருந்தது.
சுற்றிலும் பாதுகாப்பு அரணாக சுமார் 64 அடி ஆழம் கொண்ட அகழியும், மரப்பாலமும் உயிரைக் கொல்லும் முதலைகளும் கொண்டு விளங்கியதாம் இக்கோட்டை.
ஆனால் பற்பல போர்களைக் கண்ட கோட்டையின் அகழி தற்போது ஒரு புறத்தில் தூர்ந்து விட்டது.
ஒரு பகுதியில் மட்டும் தண்ணீர் நிரம்பி உள்ளது.
பொதுவாகவே கோட்டைகளுக்குப் பெயர் வைப்பது தமிழகத்தில் வழக்கமில்லை.
கோட்டைகள் இருக்கும் ஊரின் பெயரோ பகுதியின் பெயரோ வழக்கில் இருப்பது கண்கூடு. எடுத்துக் காட்டாக மலையில் இருப்பது மலைக்கோட்டை. புதிதாகக் கட்டப்படுவது புதுக்கோட்டை என்றெல்லாம் கூறலாம்.
ஆனால் இக்கோட்டைக்கு ஒரு பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அது வெயிலுக்குப் பேர் போன வேலூரில் வெயிற்காலத்தில் மட்டுமே தெரியும் வண்ணம் கோட்டை மதிலில் பொறிக்கப்பட்டுள்ளது. கோட்டையின் மேற்குப் பகுதியில் நீருக்கடியில் தமிழிலும், கன்னடத்திலும் மீசுரகண்டக் கொத்தளம் என்ற பெயர் பொறிக்கப்பட்டிருப்பதை வேனிற்காலத்தில் காண முடியும்.
தற்போது மரப்பாலம் இல்லை. அகழியின் மீது அமைக்கப்பட்ட பாலத்தில் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
கோட்டையின் முதற் சுவர்; அழகிய கருங்கல் வேலைப்பாடுகள் மற்றும் சிற்பங்களுடன் அம்பெய்யும் மாடம் கூர்மையான தாமரைப்பூ வடிவம் கொண்ட கொத்தளங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது.
அதன் உட்சுவர் தஞ்சைப் பெரிய கோவிலின் மதில் பாணியில் அமைந்துள்ளது.
அதற்கும் உட்பகுதியில் யானை அல்லது தேர் செல்லக்கூடிய அளவில் சுமார் 12 அடி அகலம் கொண்ட உயர்ந்த மண் பாதை போன்ற சுவர் அமைந்துள்ளது.
மேலும் ஒரு சுவையான செய்தி என்னவென்றால் வேலூர் மாநகரத்தின் ஏழு அதிசயங்கள் என்றழைக்கப்படுவதில் இக்கோட்டையும் இடம் பெற்றுள்ளது.
அந்த ஏழு அதிசயங்கள் என்ன என்று கேட்கத் தோன்றுகின்றதா?
1. நீரில்லாத ஆறு
2. மரமில்லாத மலை
3. அதிகாரமில்லாத காவலர்
4. அழகில்லாத பெண்கள்
5. சிலை யில்லாத கோயில்
6. பணமில்லாத கஜானா
7. அரசனில்லாத கோட்டை
என்பதாகும் இந்த ஏழு அதிசயங்களைச் சிலர் சில வேறுபாடுகளுடன் கூறுவதுமுண்டு.
இக்கோட்டைக்குள் சுமார் 14 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ள அகிலாண்டேஸ்வரி சமேத ஜலகண்டேசுவரர் அல்லது ஜக்ஷரகரேசுவரர் கோவில் உள்ளது.
இந்து அரசர்களின் ஆட்சி முடிந்து இசுலாமிய நவாபுகளின் ஆட்சி தொடங்கிய பின்பு 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மசூதியும் உள்ளது.
பின் வெள்ளையர்களின் ஆட்சியில் 1806-ல் கட்டப்பட்ட கிறித்தவ தேவாலயமும் உள்ளது. இக்கோட்டையை மும்மதச் சந்திப்பு என்றே கூறலாம்.
மேலும் திப்பு மகால், ஐதர் மகால் என்றழைக்கப்படும் அரண்மனைகளும், பாத்தி மகால், பேகம் மகால் என்று கூறப்படும் மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையைப் போன்ற தூண்களைக் கொண்ட இரு அரசவை மண்டபங்களும் உளளன.
ஆனால் பண்டைய மன்னர் ஆட்சியின் சுவடுகள் ஏதும் தெரியா வண்ணம் உள்ளிருந்த அனைத்துப் பகுதிகளும் அரசு அலுவலகங்களாக மாற்றப்பட்டிருக்கின்றன.
கோவிலுக்குரிய தெப்பக்குளம் காவலர் பயிற்சிப் பள்ளியின் மைதானமாக மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும் இங்கு பல்துறை அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.
தற்போது மாநில அரசின் தொல்பொருள் அருங்காட்சியகம், மத்தியத் தொல்பொருள் துறையின் அருங்காட்சியகம், திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தின் ஒருபிரிவு ஆகியன நடைபெற்று வருகின்றன.
அகழியில் சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்துள்ள படகு சவாரி நடக்கின்றது.
மாலை நேரத்தில் அலங்கார ஒளிவிளக்குகள் வீச கோட்டை காட்சி தருகின்றது.
ஜலகண்டேசுவரர் கோவில் திருவிழாக்கள், சித்திரை மாத புஷ்பப் பல்லக்கு, சுற்றிப் பார்ப்பதற்கு வரும் மக்கள் கூட்டம் எப்போதும் கோட்டையைக் கலகலப்பாக்குகின்றது.
நகரைச் சுற்றியுள்ள மலைச்சிகரங்களில் கட்டப்பட்டுள்ள சுக்ரோவ், சஜரோவ் முதலான மூன்று கோட்டைகளைப் பார்த்தபடி தன் பழம் பெருமைகளை நினைத்தபடி அண்ணாந்து நிற்கின்றது இந்த மீசுரக் கண்டக் கொத்தளம்.
மலைக்கோட்டைகள்
நகரைச் சுற்றிலும் நீண்டு வளர்ந்துள்ள மலைச்சிகரங்களில் கட்டப்பட்டுள்ள சுக்ரோவ், சஜரோவ், சஜ்ஜத் முதலான மூன்று கோட்டைகள் ஏறுவதற்கு மிகக் கடினமானவை.
சரியான படிகளும் இல்லை. ஆயினும் மேலே செனறால் அழகிய கருங்கற்களால் கட்டப் பட்ட சுற்றுச்சுவர்களுடன் கூடிய கோட்டைகள், இராஜா குளம், இராணி குளம் என்றெல்லாம் அழைக்கப்படுகின்ற பெரும் கிணறுகள் உள்ளது.
அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய மண்டபங்கள் என அழகு கொஞ்சுகின்றது. மேலும் மலையுச்சிகளிலிருந்து பார்க்கும் போது வேலூர் நகரத்தின் ஒரு பகுதி நமது பார்வைக்குப்படுவதும் மிகவும் அழகான காட்சியாகும்.
மணிக்கூண்டு
வெள்ளையர் காலத்தில் கட்டப்பட்ட இந்த மணிக்கூண்டு இன்று நகரின் மையத்தில் காய்கனி அங்காடியின் நுழை வாயிலாகக் காட்சியளிக்கின்றது.
இந்த மணிக்கூண்டின் சிறப்புகள் இரண்டு. ஒன்று இன்னும் ஓடிக் கொண்டிருப்பது. அடுத்தது முதல் உலகப்போரின்போது வேலூரிலிருந்து போருக்குச் சென்று மாண்டவர்கள் பற்றியும், உயிர்பிழைத்தோர் பற்றியும் கூறும் கல்வெட்டு பதிக்கப்பட்டுள்ளது.
முத்து மண்டபம்
கண்டியின் கடைசி தமிழ் அரசன் ஒருவனைத் தோற்கடித்த ஆங்கிலேயர்கள் அவனை வேலூரில் சிறையிட்டனர். அங்கேயே இருந்து மறைந்து போன அம்மன்னர் மற்றும் அவனது அரசியின் சமாதிகள் கேட்டபாரற்றுக் கிடந்தன.
ஆனால் தற்போது அதன் மீது மிக அழகிய வடிவில் முத்துச்சிப்பி போன்ற அமைப்பில் கட்டப்பட்ட கட்டடம் மிக அழகானது. பௌர்ணமி நிலவில் பாலாற்றங்கரையில் இந்த வெள்ளை நிற மண்டபத்தைப் பார்ப்பது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும் ஒரு நிகழ்வாக உள்ளது.
ஜலகண்டேசுவரர் கோயில்
இங்கு சுமார் 14 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ள அகிலாண்டேஸ்வரி சமேத ஜலகண்டேசுவரர் அல்லது ஜக்ஷரகரேசுவரர் கோவில் உள்ளது.
இக்கோவில் சுமார் 400 ஆண்டு காலமாக பூஜைகளின்றிக் கிடந்தது. தென்னிந்தியாவிலேயே மிக அழகிய சிற்ப வேலைப்பாடுகளைக் கொண்ட இக்கோவிலின் கல்யாண மண்டபத்தைக் கண்டு வியந்த ஆங்கிலேயர்கள் இம்மண்டபத்தை அப்படியே பெயர்த்துக் கொண்டு போய் இங்கிலாந்தில் நிருமிக்க முடிவு செய்து வரைபடமும் தயாரித்து மண்டபத்தைப் பிரிக்க முடிவு செய்து விட்டனர். ஆனால் ஏதோ காரணத்தால் இம்மண்டபத்தை ஏற்றிச் செல்ல வந்த கப்பல் முழுகி விட்டதால் இம்முயற்சி கைவிடப்பட்டது எனில் இந்த கோவிலின் அழகை உணரலாம்.
மேலும் இக்கோயிலுக்கு அடியில் நீராழி மண்டபம் ஒன்று அமைந்துள்ளதாக வயதானவர்கள் கூறுகின்றனர். ஆனால் அதற்குச் செல்லும் வழி ஒரு கிணற்றுக்குள்ளே நீர் நிரம்பிக் காணப்படுகின்றதால் யாராலும் சென்று காண இயலவில்லை என்கின்றனர்.
வழித்துணைநாதர் கோவில்
வேலூர் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 8 கி.மீ தொலைவில் உள்ளது மரகதாம்பிகை சமேத மார்கபந்தீசுவரர் கோவில். மிக அழகிய சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட இத்திருக்கோவிலில் கங்கை கொண்ட சோழபுரம், கங்கை கொண்ட சோழீச்சுவரர் கோவிலில் உள்ளது போன்ற சிம்மக்கிணறு ஒன்று உள்ளது. மேலும் பண்டைக் காலத்து தமிழ் மக்கள் நேரத்தை அறிய உதவும் கல்லாலான கடிகாரமும் உள்ளது. இந்தக் கோவிலுக்கும், ஜலகண்டேசுவரர் கோவிலுக்கும் இடையே சுரங்கம் இருப்பதாக நம்பப் படுகின்றது. இவ்விரு கோவில்களைப் பற்றியும் பல கதைகள் வழங்கப்படுகின்றன.
மசூதி
இக்கோட்டைக்குள்ளே 1516-ல் கட்டப்பட்ட சிறிய மசூதியும் உள்ளது. தற்போது இதில் யாரும் தொழகை நடத்தி வழிபடுவதில்லை.
தேவாலயம்
1814இல் கட்டப்பட்ட கிறித்தவ தேவாலயமும் இந்நகரக் கோட்டைக்குள்ளேயே இருக்கின்றது. மிக அழகிய ஆங்கிலோ சாக்சனிக் கட்டடக் கலையமைப்புடன் கூடிய இத்தேவாலயத்தில் தற்போதும் ஞாயிற்றுக் கிழமைகளில் வழிபாடு நடக்கின்றது.
மகால்கள்
பாத்ஜா மகால், பேகம் மகால் என்று கூறப்படும் இரு அரசவை மண்டபங்களும் கோட்டைக்குள்ளேயே உள்ளன. மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையைப் போன்ற அளவுடையதும், ஓரளவே உயரமுடையதுமான தூண்களைக் கொண்ட இம்மகால்கள் சிலகாலம் மாவட்டாட்சியர் அலுவலகமாக இருந்தது. தற்போது நடுவணரசின் அகழ்வாய்வுத்துறையின் அரும்பொருட்காட்சியகம் செயல்பட்டுக் கொண்டுள்ளது.
பிற மகால்கள்
திப்பு மகால், ஐதர் மகால் என்றழைக்கப்படும் இரு அரண்மனைகள் கோட்டைக்குள் இடம் பெற்றுள்ளன. இவை சில காலம் விடுதலைப் புலிகளின் சிறைச்சாலையாகவும் பயன்பட்டது. காவலர் பயிற்சிக் கல்லூரியின் கட்டுப்பாட்டில் இருக்கும் இக்கட்டிடங்களைப் பார்வையிடப் பொதுமக்களுக்கு அனுமதியில்லை.
அமிர்திக் காடுகள்
சுமார் 20 கி.மீ தூரத்தில் காணப்படும் அமிர்திக் காடுகள் மிக அழகிய சுற்றுலாத் தலமாகும். சின்னஞ்சிறிய ஒரு மிருகக் காட்சிசாலையுடன் இயற்கையழகு மிளிரும் குறுங்காடுகளும், கோடைக்காலத்தில் மட்டும் நீரோடும் ஒரு சிற்றருவியும் உள்ளது. இங்கு விடுமுறை நாட்களில் எப்போதும் கூட்டம் நிரம்பி வழியும்.
பொற்கோவில்
வேலூர் மகாலெட்சுமி கோயில்
வடக்கே அம்ருத்சரஸில் உள்ள பொற்கோவிலைப் போல சுமார் 1500 கிலோ பொன்னை உபயோகித்து மகாலட்சுமிக்கு ஒரு கோயில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயில். தற்போது தமிழகத்தின் முக்கியச் சுற்றுலா மையமாகத் திகழும் இக்கோவில் ஒரு தனியார் அமைப்பால் நிருவகிக்ப்படுகிறது.
திருவல்லம் கோவில்
சுமார் எட்டாம் நூற்றாண்டில் கட்டப் பெற்ற தனுர்மத்யாம்பாள் சமேத வில்வநாதீசுவரர் கோவில் வேலூரிலிருந்து சுமார் 18 கி.மீ தொலைவில் உள்ளது. அழகான பொன்னையாற்றங்கரையில் அமைந்த இக்கோவில், ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய சுதை நந்திச் சிற்பம் கொண்டது என்கிற புகழ் வாய்ந்தது. இக்கோவில் ஒரு பாடல் பெற்ற தலமாகும்.
இரத்தினகிரி
இரத்தினகிரி பாலமுருகன் கோயில்
பாலமுருகன் சுவாமி என்பவரால் பாலமுருகனுக்குக் கட்டப்பட்ட இக்கோவில் வேலூரிலிருந்து சுமார் 12 கி.மீ தொலைவில் உள்ளது. இக்கோயிலில் தமிழிலேயே வழிபாடு நடத்தப்படுவது இதன் சிறப்பாகும். பக்தர்களனைவரையும் அமரவைத்து வழிபட வைப்பதும் இக்கோவிலின் மற்றொரு சிறப்பாகும்.
வள்ளிமலை
முருகப்பெருமானின் இரண்டாவது மனைவியாகக் கருதப்படும் வள்ளி பிறந்து வளர்ந்ததாகக் கூறப்படும் பகுதி. இயற்கையெழில் பொழியும் இப்பகுதியில் 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணப்படுகைகளும் குகைகளும் உள்ளன. நன்னூலை இயற்ற உதவிய அமராபரண சீயகங்கன் என்ற அரசனைப் பற்றிய கல்வெட்டும் இவ்விடம் உள்ளது.
பிற இடங்கள்
பிரமதேசமலை, மகாதேவ மலை, இராஜாத்தோப்பு அணை, மோர்தானா அணை, தாரகேசுவரர் கோவில், ஓடைப்பிள்ளையார் கோவில், தீர்த்தகிரி மலை, சத்துவாச்சாரி அருவி முதலான பல பகுதிகள் பழமைச் சிறப்பும் புதுமைப் பெருமையும் உடைய சுற்றுலாத் தலங்களாகும். இவ்வனைத்தையும் கண்டு மகிழ சுமார் மூன்று நாட்கள் தேவைப்படும். இங்கு தங்குவதற்கு அனைத்து வசதிகளும் உண்டு. இங்கு ஒரு பிரச்சினை கோடைக் காலங்களில் கடும் வெயிலும், குளிர் காலங்களில் கடும் குளிரும் இருக்கும். இவ்விரண்டு காலங்களுக்கும் இடைப்பட்ட நாட்களில் சென்று வருவது சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு இனிமையான சுவையான அனுபவமாக இருக்கும்...
வேலூர்க் கோட்டை தெரிந்த தெரியாத பல பொக்கிஷத் தகவள்கள்...!
Reviewed by Bright Zoom
on
March 16, 2018
Rating:
Reviewed by Bright Zoom
on
March 16, 2018
Rating:


No comments: