தூத்துக்குடி மாவட்டம்!

தூத்துக்குடி மாவட்டம்!

பாஞ்சாலங்குறிச்சி - கட்டபொம்மன் கோட்டை!


வீரபாண்டிய கட்டபொம்மன் (1760 - 1799) ஆங்கிலேயரை எதிர்த்துப் போர் புரிந்த பாளையக்கார மன்னர்! இவருடைய முன்னோர்கள் விஜயநகரப் பேரரசு காலத்தில், தமிழகம் வந்தவர்கள்.  பாஞ்சாலங்குறிச்சியில் கோட்டைகட்டி, தங்கள் தலைநகரமாகக் கொண்டு "பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர்'களாக ஆட்சி செய்தனர்.

ஆங்கிலேயர் தங்கள் ஆதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்ள பாளையக்காரர்களிடம் வரி வசூல் செய்ய முயற்சி செய்தனர். அது முடியவில்லை!....1797 இல் நடந்த போரில் ஆங்கிலேயர் தோல்வியுற்றனர்.

பின் கலெக்டர் ஜாக்ஸன் துரை, கட்டபொம்மனை சந்திக்க அழைத்து, அவரை அலைய வைத்து  ஏமாற்றி அவமானப்படுத்தினார். இறுதியாக 1798 இல் ராமநாதபுரத்தில் சந்திப்பு நடந்தது. அங்கும் தந்திரமாகக் கைது செய்ய நினைத்துத் தோல்வியடைந்தார்

1799 இல் மீண்டும் கோட்டை முற்றுகையிடப்பட்டு தகர்ப்பட்டது! கட்டபொம்மன் மாற்று வழியில் வெளியேறினார்.

அந்த வருடமே புதுக்கோட்டை மன்னர் விஜய ரகுநாத தொண்டைமானால், மறைந்து இருந்த கட்டபொம்மன் கைது செய்து கம்பெனியாரிடம் ஒப்படைக்கப்பட்டார். பின் ஆங்கிலேயர்கள் அவரை கயத்தாறில் தூக்கில் இட்டனர்!

அவரது தம்பிகள் இருவரும் 1801 இல் சிறைப்பிடிக்கப்பட்டு, பாஞ்சாலங்குறிச்சியிலேயே தூக்கிலிடப்பட்டனர். 35 ஏக்கர் பரப்பளவில் இருந்த பாஞ்சாலங்குறிச்சி கோட்டை முற்றிலுமாக தகர்க்கப்பட்டது.


புதிய கோட்டை!


1974 இல் தமிழக அரசால் வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவாக பழைய கோட்டையை ஒத்த கோட்டை , கொத்தளம், கொலுமண்டபம், ஜக்கம்மா தேவி ஆலயம், என கட்டப்பட்டது.  கட்டபொம்மனின் வீர வரலாறு, ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளது. இக்கோட்டையைச் சுற்றி 6 ஏக்கர் பரப்பிற்கு மதில்சுவரும் எழுப்பப்பட்டுள்ளது.

பழைய கோட்டையும் தொல்பொருள் ஆய்வுத் துறையால் பராமரிக்கப்படுகிறது.


கயத்தாறு கட்டபொம்மன் மணிமண்டபம்!


ஆங்கிலேயர்களால் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடத்தில் பிரம்மாண்டமான மணி மண்டபம் கட்டப்பட்டுள்ளது.  பாஞ்சாலங்குறிச்சி கோட்டை வடிவிலேயே கட்டப்பட்டுள்ள இந்த மணி மண்டபத்தில் 7.25 அடி உயரத்தில் கம்பீரமான தோற்றத்தில் கட்டபொம்மனின் வெண்கலச்சிலை வைக்கப்பட்டுள்ளது.


வீரன் அழகுமுத்துக்கோன் நினைவு மண்டபம்!


இந்தியாவில் முதல் விடுதலைப் போர் 1857 இல் நடந்ததாக கூறப்பட்டாலும், அதற்கும் முன்பே நாட்டின் பல பகுதிகளிலும் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் பலரும் போர் புரிந்துள்ளனர். அவர்களில் ஒருவர்தான் கட்டாலங்குளம் சீமை அரசர். பாளையக்காரர் வீரன் அழகு முத்துக்கோன் (1728 - 1757) இவர் தன் 22 ஆவது வயதில் மன்னரானார். இவருக்கும் ஆங்கிலேயர்களின் படைத்தளபதியாக இருந்த முகம்மது யூசுப்கான் என்பவருக்கும், பெத்த நாயக்கன் கோட்டையில் போர் நடந்தது. வலதுகாலில் சுடப்பட்டபோதும், வீரத்துடன் போர் புரிந்தார். போரின் முடிவில் ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு இவரும், உடன் இருந்த 7 பேரும் பீரங்கிகளால் சுடப்பட்டனர்.

வீரன் அழகு முத்துக்கோனுக்கு தமிழக அரசால் கட்டாலங்குளத்தில் முழு உருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது.


வீரன் சுந்தரலிங்கம் நினைவுச் சின்னம்!


கட்டபொம்மனின் தளபதியான இவர், "முதல் பாளையக்காரர்கள் போரில்' கொல்லப்பட்டார். சுந்தரலிங்கம் தன் முறைப்பெண்ணுடன் வெள்ளையர்களின் வெடிமருந்து கிடங்கிற்குள் 1799 இல் தீப்பந்தங்களுடன் நுழைந்து, கிடங்கினைத் தகர்த்தார். இவரின் நினைவாக அரசு நினைவுச் சின்னம் அலங்கார வளைவு, உருவச்சிலை முதலியவை அமைக்கப்பட்டுள்ளது.


மகாகவி பாரதி மணிமண்டபமும் பிறந்த இல்லமும்!


எட்டையபரத்தில் பிறந்த மகாகவி சுப்ரமணியய பாரதியாரின்  (1882 - 1921) வீடு நினைவு இல்லமாகப் பராமரிக்கப்படுகிறது. அவரை கெளரவிக்கும் வகையில் மணிமண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது.  சிறந்த கவிஞர், பத்திரிகையாளர், எழுத்தாளர், சமூக சீர்திருத்தவாதி ஆகிய இவரது உருவச்சிலை, புகைப்படங்கள் மற்றும் வரலாற்றை காட்சிகளாக மணிமண்டபத்தில் வைத்திருக்கிறார்கள். பாரதியாரின் நூல்கள் தமிழக மாநில அரசால் 1949 இல் நாட்டுடமையாக்கப்பட்டன. நாட்டுடமையாக்கப்பட்ட முதல் இலக்கியங்கள் பாரதியாருடையதுதான்!


வ.உ.சிதம்பரனார் நினைவு இல்லம்! - ஒட்டபிடாரம்


இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், செக்கிழுத்த செம்மலும் ஆகிய வ.உ.சிதம்பரம் பிள்ளை (1872 - 1936) பிரிட்டிஷ் கப்பல்களுக்குப் போட்டியாக முதல் உள்நாட்டு இந்திய கப்பல் நிறுவனத்தைத் தொடங்கினார். ஒட்டபிடாரத்தில் இவர் வாழ்ந்த வீடு நினைவு இல்லமாக பராமரிக்கப்படுகிறது. இங்கு ஒரு நூலகமும் செயல்படுகிறது. வ.உ,சி. யின் பல புகைப்படங்களும் இங்குள்ளன.


உமறுப்புலவர் மணிமண்டபம்!


உமறுப்புலவர் (1642 - 1703) முகம்மது நபி அவர்களது வரலாற்றை, தமிழ் இலக்கிய மரபுப்படி "சீறாப்புராணம்' என்ற காப்பியமாக எழுதியவர். எட்டயபுரத்தில் வாழ்ந்ததினால் இவருக்கும் மணிமண்டபம் உள்ளது.


முத்துசாமி தீக்ஷிதர் மணி மண்டபம்!


கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீக்ஷிதர் பல கீர்த்தனைகளை இயற்றியும் பாடியும் சங்கீதத்திற்கு சேவை புரிந்துள்ளார். பக்திரசம் பெருகும் இப்பாடல்கள் இன்றளவும் புகழ்பெற்றவை. எட்டயபுரம் மன்னரால் ஆதரிக்கப்பட்ட இவர் இங்குதான் தன் இறுதி நாட்களில் வாழ்ந்து மறைந்தார். இவருடைய சமாதியும், மணிமண்டபுமும் எட்டயபுரத்தில் உள்ளன.


ஸ்ரீநல்லப்ப சுவாமிகளின் நினைவிடம்!


இசை மேதை நல்லப்ப சுவாமிகள் (1889 - 1960) கர்நாடக இசையை எந்த குருவுமின்றி, சங்கீதக் கச்சேரிகளைக் கேட்டு, கிரகித்து தனது அற்புத நினைவாற்றலால் கேட்பவர்கள் பரவசமடையும் வகையில் பக்தி ரசம் சொட்டச் சொட்டப்  பாடும் ஆற்றலைக் கொண்டவர். ராக ஆலாபனையில் பேரும் புகழும் பெற்றவர்.  இவருடைய சமாதியும் நினைவிடமும் விளாத்திகுளத்தில் உள்ளது.

இவருக்கு நினைவுத் தூண் மற்றும் மணிமண்டபமும் அமைக்க தற்போது பணிகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.


வாஞ்சி மணியாச்சி!


சுதந்திரப்போராட்ட வீரர் வாஞ்சிநாதன் 1886 இல் பிறந்தார். இவர் விடுதலை போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்த காலத்தில், ஆங்கிலேயர்கள் சுதேசி கப்பல் நிறுவனம் நடத்தியதற்காக வ.உ,சி. அவர்களையும், சுப்பிரமணிய சிவா அவர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தது.

இதற்காக திருநெல்வேலி மாவட்ட கலெக்டர்ஆஷ் துரையை 1911 ஆம் ஆண்டு மணியாச்சி ரயில் நிலையத்தில் ரயிலில் வைத்து துப்பாக்கியால் சுட்டுவிட்டு, அதே துப்பாக்கியால் தன்னையும் சுட்டுக்கொண்டு வீர மரணம் அடைந்தார்.

வாஞ்சிநாதன் நினைவாக மணியாச்சி ரயில் நிலையம் "வாஞ்சி மணியாச்சி' என்று அழைக்கப்படுகிறது.


மணப்பாடு!


கடலுக்குள் சற்று நீண்டு ஒரு சிறிய தீபகற்பம் போல் தோன்றும், பாறையும் மணலுமாய் காணப்படும் சிறு குன்று உள்ளது. அதன் மீது உள்ள 400 ஆண்டுகள் பழமையான தேவாலயமும் இருக்கிறது.

அதே போல் ஒரே தெருவில் மேலைநாட்டு கட்டிட முறையில் பிரம்மாண்டமாகவும், அழகாகவும் கட்டப்பட்ட 2 தேவாலயங்களும் அழகிய வீடுகளும், படகுகளும் கொண்ட எழில் மிக்க கிராமம் இது!


அய்யனார் சுனை!


ஆண்டு முழுவதும் ஊற்று பெருகும் இயற்கையான நீரூற்று! அருகில் ஓர் அய்யனார் கோயில், மணற்குன்றுகள், மற்றும் காடும் சூழ்ந்த அழகிய இடம்.

வல்லநாடு! - வெளிமான் காப்பகம்!

16.41 ச,கி.மீ. பரப்பளவு கொண்ட புதர்க்காடு. இங்கு புள்ளிமான், வெளிமான், காட்டுப்பூனை, முயல்கள் போன்ற விலங்குகள் உள்ளன. இவ்வனப்பகுதி, அழிந்து வரும் இனமான வெளிமான்கள் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளது இவ்வெளிமான்கள்  மிகவும் வேகமாக, மணிக்கு 64 - 96 கி.மீ. வேகத்தில் ஓடும் ஆற்றலுள்ளவை. இவற்றை திருகுமான், முருகு மான் என்றும் அழைப்பர். ஆண் மான்களே கலைமான்கள் எனப்படுகிறது.


தூத்துக்குடி மாவட்டம்! தூத்துக்குடி மாவட்டம்! Reviewed by Bright Zoom on August 23, 2018 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.