நாராய் நாராய் செங்கால் நாராய்
கீழ் காணும் இந்த செய்யுளை இயற்றியவர் திரு. சத்தி முத்த புலவர் ஆவார். ஒருநாள் பாண்டியன் தனது சபையிலிருந்த புலவர்களை வரவழைத்து நாரையின் வாய்க்கு எதனை ஒப்பிடலாம் என கேட்க அதற்கு சபையிலிருந்த புலவர்கள் திரு திருவென விழித்தனர்.
அன்றிரவு மன்னன் நகர சோதனைக்கு புறப்பட்டான். அவ்வழியே வறுமையின் பிடியில் இருந்த புலவர் ஒருவரைக் கண்டான். அவர் மிகவும் களைப்படைந்து காணப்பட்டார். மன்னன் நகர சோதனைக்கு வருவது அறியாது, அந்த நேரத்தில் மேலே பறந்து போன ஒரு நாரையைக் கூட்டத்தைக் கண்ட புலவர் நெஞ்சில் பாடல் பிறந்தது. உடனே வாய் திறந்து "நாராய் நாராய் செங்கால் நாராய்" -என பாட ஆரம்பித்து விட்டார்.
அந்த பாடல் வரிகளில் நாரையின் வாய்க்கு பனங்கிழங்கை உவமையாக ஒப்பிட்டு பாடப்பட்டிருந்தது.மன்னன் மிகவும் மகிழ்ந்து அந்த புலவரின் வறுமையைப் போக்கினான் என்பது வரலாறு. அந்த பாடல் முழுவதும் உங்கள் பார்வைக்கு எழுதி இருக்கிறேன். இச் செய்யுளை வாசகர்களாகிய உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
நாராய் நாராய் செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய் செங்கால் நாராய்
நீயும் உன் மனைவியும் தென்திசை குமரியாடி
வடதிசைக்கு ஏகுவீராயின் எம்மூர்ச்
சத்தி முத்த வாவியுட் தங்கி
நனை சுவர் கூரை கனை குரற் பல்லி
பாடு பார்த்திருக்கும் மனைவியைக் கண்டு
எங்கோன் மாறன் வழுதி கூடலில்
ஆடையின்றி வாடையில் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்திக்
காலது கொண்டு மேலது தழீஇ
பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழையாளனைக் கண்டனம் எனுமே!
என்பதாகும். இதன் பொருள்:-
பனங்கிழங்கை பிளந்தார் போல் அலகு கொண்ட நாரைக் கூட்டங்களே.. நாரைக் கூட்டங்களே.. நீயும் உன் இல்லாளும் தென் திசையில் விளையாடிக் களைத்து விட்டு வடக்கு திசை வழியே செல்லும் போது 'சத்திமுத்தம்' என்னும் எங்கள் ஊர் குலத்தினில் தங்கி சற்று இளைப்பாறி கொள்ளுங்கள்.
அந்த சமயம் பொருள் ஈட்டச் சென்ற என் தலைவன் எப்போது வருவான் என மழை பெய்து நனைந்து போன சுவர் இருக்கும் கூரை வீட்டில், தலைவன் வரும் சேதியை அறிவிக்கும் முகமாக வீட்டுச் சுவர் மீது உள்ள பல்லியையே பார்த்திருக்கும் என் மனைவியிடம் சொல்லுங்கள்.
மன்னனைப் பார்க்க வந்த நேரம் இருண்டு போனதால், இந்த மதுரையம்பதியில் ஓர் மூலையில் உள்ள சத்திரத்தில் ஆடை இல்லாமல் குளிரினால் கை கால்ககளை கட்டிக்கொண்டு பெட்டிக்குள் இருக்கும் ஒரு பாம்பு போல இருக்கின்ற உன் தலைவனை கண்டேன் என்று கூறுவாயா?
என்று நாரை விடு தூதாக அமைந்துள்ளது இந்த புலவரின் செய்யுள். பொருள் பொதிந்த இந்த பாடல்
உங்களுக்கும் பிடிக்கும் என்கிற நம்பிக்கையோடு விடை பெறுகிறேன்.
நாராய் நாராய் செங்கால் நாராய்
Reviewed by Bright Zoom
on
September 06, 2018
Rating:
Reviewed by Bright Zoom
on
September 06, 2018
Rating:


No comments: