உலகின் டாப் 10 பணக்காரர்கள்
2017 ஆண்டிற்கான உலகின் பணக்காரர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் கடந்த ஆண்டை விட பணக்காரர்கள் 13 சதவீதம் அதிகரித்துள்ளனர். உலகின் டாப் 10 பணக்காரர்கள் 2017 பற்றிப் பார்ப்போம்.
கடந்த ஆண்டில் பணக்காரர்களின் எண்ணிக்கை 1810 ஆகும். இந்தாண்டில் பணக்காரர்களின் எண்ணிக்கை 2043 அதிகரித்துள்ளது.
உலக அளவில் இந்திய பணக்காரர்களின் நிலை
இப்பட்டியலில் இந்தியாவின் முதல் பணக்காரர் முகேஷ் அம்பானி 23.2 பில்லியன் டாலர் சொத்து மதிப்பினைப் பெற்று உலக அளவில் 33 வது இடத்தினைப் பிடித்துள்ளார்.
லட்சுமி மிட்டல் 16.4 பில்லியன் டாலர் சொத்து மதிப்பினைக் கொண்டு உலகின் 56வது பணக்காரர் ஆவார்.
விப்ரோ நிறுவனத் தலைவர் அஜிம் பிரேம்ஜி 14.9 பில்லியன் டாலர் சொத்துக்களைக் கொண்டு உலகின் 72வது பெரிய பணக்காரர் ஆவார்.
சன் பார்மாசூட்டிக்கல்ஸ் நிறுவனர் திலீப் சிங்வி 13.7 பில்லியன் டாலர் சொத்து மதிப்பினைப் பெற்று 84வது இடத்தில் உள்ளார்.
எச்சிஎல் நிறுவனத் தலைவர் ஷிவ் நாடார் 12.3 பில்லியன் டாலர் சொத்து மதிப்பினைப் பெற்று 102-வது பெரிய பணக்காரர் ஆவார்.
பிர்லா நிறுவனத் தலைவர் ஆதித்யா பிர்லா 9.5 பில்லியன் டாலர் சொத்துக்களைக் கொண்டு 133வது இடத்தில் உள்ளார்.
பூன்வாலா 8.1 பில்லியன் டாலர் சொத்து மதிப்பினைப் பெற்று 159வது இடத்தில் உள்ளார்.
கோடாக் மகேந்திரா பேங்க் நிறுவனர் கோடாக் 8.0 பில்லியன் டாலர் சொத்துக்களைக் கொண்டு 166வது இடத்தில் உள்ளார்.
சுனில் மிட்டல் 7.5 பில்லியன் டாலர் சொத்துக்களைக் கொண்டு 182வது இடத்தைப் பிடித்துள்ளார்.
கௌதம் அதானி 5.8 பில்லியன் டாலர் சொத்தினைக் கொண்டு 250 வது இடத்தில் உள்ளார்.
இனி உலகின் டாப் 10 பணக்காரர்கள் 2017 பற்றிப் பார்ப்போம்.
1. பில் கேட்ஸ் – 86 பில்லியன் டாலர்

மைக்ரோ சாப்ட் நிறுவனத் தலைவரான பில் கேட்ஸ் 86 பில்லியன் டாலர் சொத்து மதிப்பினைப் பெற்று உலகின் முதல் பணக்காரர் என்ற இடத்தைப் பிடித்துள்ளார். கடந்த 23 ஆண்டுகளில் இவர் 18 முறை முதல் இடத்தைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 2.3 சதவீதப்பங்குகளை வைத்துள்ளார். 1975-ல் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை உருவாக்கிய இவர் தற்போது அந்நிறுவனத்தின் போர்ட் ஆப் மெம்பர் ஆகவும், தொழில்நுட்ப ஆலோசகராகவும் உள்ளார்.
இவர் கென்னடியன் ரெயில்வேஸ், டிராக்டர் தயாரிப்பாளர் தீர் அன் கோ மற்றும் கார் டீலர் ஆட்டோ நேசன் ஆகியவற்றிலும் பங்குதாரராக உள்ளார். முந்தைய ஆண்டில் இவருடைய சொத்து மதிப்பு 75 பில்லியன் டாலராக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
2. வாரன் பஃபட் – 75.6 பில்லியன் டாலர்

அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டாளர் வாரன் ஃபப்பட் 75.6 பில்லியன் டாலர் சொத்து மதிப்பினைப் பெற்று உலகின் இரண்டாவது பணக்காரர் என்ற இடத்தை பிடித்துக் கொணடுள்ளார்.
இவர் எப்பொழுதும் சிறந்த முதலீட்டாளராகத் திகழ்ந்ததே இவரின் வெற்றிக்கு காரணமாகும். இவருடைய பெர்ஷயர் ஹாத்வே கெய்கோ, டுராசெல் மற்றும் டெர்ரி கியூன் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட நிறுவனங்களை சொந்தமாக்கி கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இவர் தனது 11வது வயதில் முதலில் பங்குசந்தையில் பங்குகளை வாங்கத் தொடங்கினார். தனது 13வது வயதில் வருமான வரி கட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இதுவரையிலும் 28.5 பில்லியன் டாலர்களை தொண்டு நிறுவனத்திற்கு வழங்கியுள்ளார்.
3. ஜெஃப் பெஸாஸ் – 72.8 பில்லியன் டாலர்

அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெஃப் பிஸாஸ் 72.8 பில்லியன் டாலர் சொத்து மதிப்பினைப் பெற்று உலகின் மூன்றாவது பணக்காராக திகழ்கிறார்.
ஆன் லைன் வர்த்தகத்தின் முன்னோடியான இவர் அமோசான்.காம்-ல் 17 சதவீதப் பங்குகளை வைத்துள்ளார். இவர் 1994 முதல் ஆன்லைனில் புத்தகங்களை விற்கத் தொடங்கினார்.
இவருடைய ப்ளுஆரிஜின் என்ற ஏரோ ஸ்பேஸ் நிறுவனம் விண்ணுக்கு பயணிகளை ஏற்றி செல்ல ராக்கெட்டை மறுசுழற்சி செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
2013-ல் வாசிங்டன் போஸ்ட் என்ற நிறுவனத்தை 250 மில்லியன் டாலருக்கு வாங்கியுள்ளார். சென்ற ஆண்டைவிட 27.6 பில்லியன் டாலர் சொத்து மதிப்பினை அதிகப்படுத்தியுள்ள இவர் முதல் மூன்று உலகப் பணக்காரர் பட்டியலில் முதன்முறையாக இடம் பிடித்து சாதனை செய்துள்ளார்.
4. அமன்சியோ ஒர்டேகா-71.3 பில்லியன்

உலகின் மிகப்பெரிய விற்பனையாளரான அமென்சியோ ஒர்டேகா 71.3 பில்லியன் டாலர் சொத்து மதிப்பினை கொண்டு உலகின் நான்காவது பெரிய பணக்காரர் என்ற இடத்தைப் பெறுகிறார். இவர் ஐரோப்பாவின் மிகப் பெரிய செல்வந்தர் ஆவார்.
1975-ல் தனது மனைவியுடன் இணைந்து ஜாரா ஆடைகள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்களை தொடங்கினார். இவர் டிவிடென்ட் மூலம் ஓர் ஆண்டில் சுமார் 400 மில்லியன் டாலர் வருவாய் பெறுகிறார்.
இவர் மான்ட்ரிட், பார்சிலோனா, லண்டன், சிகாகோ, மியாமி மற்றும் நியூயார்க் உள்ளிட்ட நகரங்களில் ரியல் எஸ்டேட் துறையில் பணத்தினை முதலீடு செய்கிறார்.
5. மார்க் சுக்கர்பெர்க் – 56 பில்லியன்

உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் பேஸ் புக் நிறுவனரான மார்க் ஜூர்க்கர் பெர்க் 56 பில்லியன் சொத்து மதிப்பினைப் பெற்று உலகின் ஐந்தாவது பெரிய பணக்காரராகத் திகழ்கிறார்.
இவர் கடந்த ஆண்டைவிட 11.4 பில்லியன் டாலர் சொத்து மதிப்பினை கூடுதலாகப் பெற்று முதன் முதலில் முதல் ஐந்து உலகப் பணக்காரர் வரிசையில் இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் 2004-ல் தனது 19வது வயதில் பேஸ் புக்கைத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது வளர்ச்சிக்கு இவரின் சமூக நெட்வொர்க் பங்கு விலை உயர்ந்ததே ஆகும்.
6. கார்லோஸ் ஸ்லிம் ஹீலு – 54.5 பில்லியன்

மெக்ஸிகோவின் மிகப்பெரிய செல்வந்தரான கார்லோஸ் ஸ்லீம் ஹீலு 54.5 பில்லியன் சொத்து மதிப்பினைக் கொண்டு உலகின் ஆறாவது பணக்காரராத் திகழ்கிறார்.
கடந்த பத்து ஆண்டுகளில் இவர் முதன்முறையாக உலக பணக்காரர் வரிசைப் பட்டியலில் முதல் ஐந்து இடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் லத்தீன் அமெரிக்காவின் மிகப்பெரிய மொபைல் தொலைத் தொடர்பு நிறுவனமான அமெரிக்கா மூவில் என்கின்ற நிறுவனத்தை நிருவகிக்கிறார். இவர் 1990-ல் மெக்ஸிகோவின் ஒரே மொபைல் தொலைத் தொடர்பு நிறுவனமான டெலிமேக்ஸ் பங்குகளை வாங்கினார்.
மேலும் இவர் மெக்ஸிகன் கன்ஸ்ட்ரக்ஸன்ஸ், ரியல் எஸ்டேட், மைனிங் போன்ற துறைகளில் உள்ள நிறுவனங்களிலும் பங்குதாரராக உள்ளார். நியூயார்க் டைம்ஸில் 17 சதவீதப் பங்குளை இவர் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
7. லாரி எலிசன் – 52.2 பில்லியன்

ஆரக்கிள் கார்ப்பரேசனின் தலைவரான லாரி எலிசன் 52.2 பில்லியன் டாலர் சொத்து மதிப்பினைக் கொண்டு உலகின் ஏழாவது பணக்காரராக உள்ளார்.
1977-ல் ஆரக்கிள் நிறுவனத்தைத் தொடங்கினார். தற்போது அவர் ஆரகிள் நிறுவனத் தலைவராகவும், தலைமைத் தொழில் நுட்ப வல்லுநராகவும் உள்ளார். 2016-ல் புற்றுநோய் சிகிச்சைக்காக 200 மில்லியன் டாலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
8. சார்லஸ் கோச் – 48.3 பில்லியன்

பல்வேறு துறைகளின் தலைவர் மற்றும் நிர்வாக அதிகாரியான சார்லஸ் கோச் 48.3 பில்லியன் சொத்து மதிப்பினைக் கொண்டு உலகின் எட்டாவது பெரிய பணக்காரராகத் திகழ்கிறார்.
இவர் 1967-ல் முதல் இருந்து வரும் அமெரிக்காவின் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமான கோச் இன்டஸ்டீரிஸின் தலைமை நிர்வாகி ஆவார். இந்நிறுவனம் குழாய்கள், ரசாயனங்கள், டிக்ஸி கப், பேப்பர் துண்டுகள் ஆகியவற்றின் மூலம் 100 பில்லியன் டாலர் வருவாயை ஈட்டியுள்ளது.
9. டேவிட் கோச் – 48.3 பில்லியன்

டேவிட் கோச் 48.3 பில்லியன் டாலர் சொத்துக்களைக் கொண்டு தனது சகோதரர் சார்லஸ் கோச்சுடன் எட்டாவது பெரிய பணக்காரர் என்ற இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இவர் 1967-ல் முதல் இருந்து வரும் அமெரிக்காவின் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமான கோச் இன்டஸ்டீரிஸில் அதிகப் பங்குகளைப் பெற்றுள்ளார். இவர் 1980-ல் லிபர்டி கட்சியின் சார்பாக அமெரிக்க துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
10. மைக்கேல் ப்ளும்பெர்க் – 47.5 பில்லியன்

ப்ளும்பெர்க் தலைமை நிர்வாகியான மைக்கேல் ப்ளும்பெர்க் 47.5 பில்லியன் சொத்து மதிப்பினைப் பெற்று உலகின் பத்தாவது பெரிய பணக்காரர் ஆவார்.
இவர் 1981-ல் நிதி தகவல் மற்றும் ஊடக நிறுவனமான ப்ளும்பெர்க் எல்பி-ஐத் தொடங்கினார். இந்நிறுவனத்தில் இவரின் 88 சதவீதப் பங்குகள் 45 பில்லியன் டாலர் மதிப்பினைக் கொண்டுள்ளன.
இவர் காலநிலை மாற்றம், துப்பாக்கியை அடக்குதல் உள்ளிட்டவற்றிற்காக 4 பில்லியன் டாலர்களை நன்கொடையாகத் தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பெர்முடா, லண்டன் உள்ளிட்ட ஆறு இடங்களில் இவருக்கு பங்களாக்கள் உள்ளன.
உலகின் டாப் 10 பணக்காரர்கள்
Reviewed by Bright Zoom
on
March 27, 2019
Rating:
No comments: