Bright Zoom News
28 டிச 2019
ஆளுநர் மாளிகையை நோக்கி தேசியக் கொடியோடு பேரணி: திரண்ட இஸ்லாமியர்கள்!
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து சென்னையில் ஆளுநர் மாளிகையை நோக்கி இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் பேரணி நடைபெற்றது.
குடியுரிமை திருத்தச் சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிராக இருப்பதாகக் கூறி 15 நாட்களுக்கும் மேலாக நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. எனினும், சட்டத்தை திரும்பப் பெறப்போவதில்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.
இந்த நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டுமென தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகளின் சார்பாக இன்று (டிசம்பர் 28) சென்னை ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடைபெற்றது.
சென்னை ஆலந்தூரில் குடும்பத்தினருடன் திரண்ட ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள், ஆளுநர் மாளிகையை நோக்கி ஊர்வலமாக சென்றனர் .650 மீட்டர் நீண்ட தேசியக் கொடியினை கையில் ஏந்திக்கொண்டு சென்ற அவர்கள் , குடியுரிமை வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டக்கூடாது என்று வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிமுன் அன்சாரி, “குடியுரிமை, என்.சி.ஆர் சட்டங்களை அமல்படுத்த ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். எந்த அதிகாரியாவது ஆவணங்களை கணக்கெடுக்கிறோம் என்ற பெயரில் எங்கள் பகுதிக்கு வந்தால் அவர்களை விட மாட்டோம். தமிழகத்திலுள்ள அனைத்து சமுதாய மக்களையும் இணைத்து சட்ட மறுப்பு இயக்கத்தை, ஒத்துழையாமை இயக்கத்தை நடத்தப்போகிறோம்” என்று தெரிவித்தார்.
மற்ற மாநிலங்களைப் போல தமிழகத்திலும் இந்த சட்டத்தை அமல்படுத்தமாட்டோம் என முதல்வர் அறிவிக்க வேண்டும். மக்களின் உணர்வுகளுக்கு தமிழக அரசு மதிப்பளிக்கவில்லை என்றால் சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் கூட அறிவிப்போம். இந்த போராட்டத்தை மக்கள்தான் நடத்துகிறார்கள் என்று குறிப்பிட்ட தமிமுன் அன்சாரி “இந்தியர்கள் இந்தியாவுக்காக இன்னொரு சுதந்திரப் போராட்டத்தினை நடத்திக்
கொண்டிருக்கிறார்கள்.
தமிழக சட்டமன்றம் கூடும்போது, இந்தியாவே அதனை திரும்பிப் பார்க்கும். வெய்ட் அண்ட் சீ” என்று கூறியுள்ளார்.
ஆளுநர் மாளிகையை நோக்கி தேசியக் கொடியோடு பேரணி: திரண்ட இஸ்லாமியர்கள்!
Reviewed by Bright Zoom
on
December 28, 2019
Rating:
No comments: