Bright Zoom Today. News
29 டிசம்பர் 2019
கோலம் வரைந்து சிஏஏ, என்.ஆர்.சிக்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்களை காவல் துறை கைது செய்ததற்கு எதிர்ப்புகள் வலுத்துள்ளன.
குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடியுரிமை பதிவேடு (என்.ஆர்.சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்.பி.ஆர்) ஆகியவற்றுக்கு எதிராக நாடு முழுவதும் வெவ்வேறு வடிவங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் சென்னை பெசன்ட் நகர் பகுதியில் இன்று (டிசம்பர் 29) குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான வாசகங்களை கொண்ட கோலத்தை வரைந்து பெண்கள் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
தகவலறிந்து அங்கு விரைந்த காவல் துறையினர் கோலம் வரைய அனுமதி மறுத்தனர். அதற்கு பெண்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே, 7 பேரை வலுக்கட்டாயமாக கைது செய்து வேனில் ஏற்றிச் சென்று பெசன்ட் நகர் சமுதாயக் கூடத்தில் அடைத்துவைத்தனர். பின்னர், சிறிது நேரத்திற்குப் பிறகு அனைவரையும் விடுவித்தனர்.
அவர்கள் மீது முன் அனுமதியின்றி கூடுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். கோலம் போட்டு எதிர்ப்பை பதிவு செய்தவர்கள் மீது வழக்கு போடுவதா என்று இதற்கு பல தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அலங்கோல அதிமுக அரசின் அராஜகம் நாளுக்கு நாள் அதிகமாகி வருவதற்கு இது மேலும் ஓர் உதாரணம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, “இது ஒரு பாசிச அடக்குமுறை. இதுபோல தமிழகத்தில் நடந்ததே இல்லை. மார்கழி மாதங்களில் பெண்கள் வாசலில் கோலம் போடுவது வழக்கம். அரசின் போக்கு தவறானது. அவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்” என்று கருத்து தெரிவித்தார்.
திமுக மகளிரணித் தலைவர் கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், “நம் நாட்டில் வாசல் கூட்டுவது, கோலம் போடுவது போன்றவை தேசவிரோதம் என அறிந்துகொண்டேன். பெற்ற சுதந்திரத்தை பேணிக் காத்து, அடிப்படை உரிமைகளை அனைவர்க்கும் உறுதி செய்து, தங்கள் எஜமானரின் மனங்குளிர செயல்படும் எடப்பாடி அரசுக்கு பாராட்டுகள்” என்று விமர்சித்துள்ளார்.
மேலும், “குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில், மகளிர் அணியினர் நாளை தங்களது வீட்டு வாசல்களில் நோ சிஏஏ, நோ என்.ஆர்.சி என்ற வாசகங்கள் அடங்கிய கோலம் போட வேண்டும்” என்றும் மகளிரணியினருக்கு கனிமொழி அறிவுறுத்தியுள்ளார்.
தென்சென்னை மக்களவை உறுப்பினரும் கவிஞருமான தமிழச்சி தங்க பாண்டியன், “கருத்துரிமை என்பது நமது அரசியல் சாசனம் அனுமதித்த விஷயம். வீடுகளில் பெண்கள் தங்களுடைய விருப்பப்படி எந்தவித கோலம் வேண்டுமானாலும் போடுவதற்கு உரிமை உள்ளது. அதுவும் மார்கழி மாதத்தில் பெண்கள் தங்களது மன உணர்வுகளை கோலத்தின் வாயிலாக வெளிப்படுத்துவர். அவர்களை கைது செய்தது வருத்தத்திற்குரிய கண்டனத்திற்குரிய செயல்” என்று கூறினார்.
எனினும் கைது செய்ததை நியாயப்படுத்தும் விதமாக கருத்து தெரிவித்துள்ளார் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கோலம் இடுவதில் எந்த பிரச்சினையும் இல்லை. கோலத்தில் உள்ள கருத்துக்கள் வன்முறையை தூண்டும் விதமாக இருந்திருந்தால் அதுதான் பிரச்சினை. கோலம் போட்டதற்காக யாரையும் கைது செய்திருக்க மாட்டார்கள். கோலத்தில் இருந்த கருத்துக்கள் அலங்கோலமாக இருந்திருந்தால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்தலாம் என்பதால் கைது செய்வது காவல் துறையின் கடமை” என்று கூறியுள்ளார்.
தமிழகம் முழுவதும் CAA எதிர்த்து கோலங்கள் வரையப்படுகின்றன...!
Reviewed by Bright Zoom
on
December 29, 2019
Rating:
No comments: