தமிழிசை ஆய்வாளர் :
ஆப்ரகாம் பண்டிதர் (1859-1919)
தமிழிசை ஆய்வாளர் :
ஆப்ரகாம் பண்டிதர் (1859-1919)
இசையியல் பற்றிய வரன்முறையான ஆய்வு நோக்கி நமது கவனத்தை குவிக்கும் போது 'தமிழிசை' பற்றிய ஆய்வுத் தடங்கள் எம் மிடையே இருந்துள்ளதை அறிய முடிகிறது. ஆய்வுக் கண்ணோட்டத்தில் பார்க்கும் போது தமிழிசையே இப்போது தென்னிந்திய இசை என்றும் கர்நாடக சங்கீதம் என்றும் வழங்கப் படுகிறது. வடஇந்திய இசை அல்லது ஹிந்துஸ் தானி இசை இந்தத் தமிழிசையின் ஒரு வளர்ச்சி நிலையே என்றும் தெரியவருகிறது.
இவ்வாராய்ச்சிக்கு முன்னோடியான இசையிய லாளர் தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் (1859-1919). கர்நாடக இசை என்ற விரிந்த சட்டகத்திற்குள் தமிழிசையைப் பற்றி அவர் மேற்கொண்ட ஒரு முறையான அறிவியல் வகைப்பட்ட ஆராய்ச்சியின் பயனாக 1917இல் அவர் வெளியிட்ட 'கருணாமிர்த சாகரம்' என்ற நூலுக்கு இணையான பெரும்படைப்பு இதுவரை ஏதுமில்லை.
தமிழரிடையே வழங்கிவந்த இசை மரபு தனது தொடர்ச்சியை இழந்து நின்ற போது ஆபிரகாம் பண்டிதர் தமிழ் இசையியலை மறுகண்டுபிடிப்பு செய்தார். பண் ஆராய்ச்சி மற்றும் இலக்கிய ஆராய்ச்சியின் வழியாக தமிழிசையே, தமிழ் நாட்டிலும் இந்தியாவின் பிற பகுதிகளிலும் பல வடிவங்களில் வழங்கி வரும் இசை என்று நிரூபித்த முன்னோடி ஆய்வாளராவார்.
ஆபிரகாம் நெல்லை மாவட்டத்தில் தென் காசியை அடுத்து சாம்பவர் வடகரை என்னும் சிற்றூரில் சு. முத்துசாமி நாடாருக்கும் அன்னம் மாள் அம்மையாருக்கும் 2.8.1859 இல் பிறந்தார். ஆபிராகம் தமது ஆரம்பக் கல்வியை சுரண்டையில் முடித்தார். பின்னர் சுரண்டைக்கு கிழக்கே பன்றிகுளம் என்னும் ஊரிலுள்ள உயர்தர ஆரம்ப பள்ளியில் படித்தார்.
1874ஆம் ஆண்டு ஆபிரகாம் திண்டுக்கல்லில் இருந்த நார்மன் ஆசிரியப் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து படித்தார். இங்கே இவர் தமிழ் இலக்கிய இலக்கணங்களை நன்கு தேர்ந்து கற்றார். அங்கேயே ஆசிரியராகவும் பணி புரிந்தார்.
1877 ஆம் ஆண்டு சுருளிமலையில் வசித்து வந்த அருள்மாரி கருணானந்த மகரிஷி என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. உயிர் காக்கும் மருத்துவப் பணியை இவரிடமிருந்து ஆபிரகாம் கற்றுக் கொண்டார். இவரையே தனது குருநாதராக ஏற்றுக் கொண்டார். சித்த மருத்துவத் துறையில் ஆபிரகாம் துறை போனவரானார்.
1882இல் பண்டிதர் நஞ்சங்குளத்தைச் சேர்ந்த ஞானவடிவு பொன்னம்மையைத் திருமணம் செய்து கொண்டார். 1883இல் தஞ்சை வந்து சித்த மருத்துவத் தொழிலைத் தொடங்கினார். இதில் அவர் பெரும் பொருளீட்டினார். இக்கால கட்டத்தில் புதுவகை பயிர்களை வேளாண்மை செய்வதிலும் காற்றாலைகள் நிறுவி நீர்ப்பாசனம் செய்வதிலும் ஆபிரகாம் பண்டிதருக்கு பெரும் ஆர்வம் இருந்தது. 1911 இல் மின்சாரத்தில் இயங்கும் அச்சுக்கூடம் ஒன்றை நிறுவினார்.
இவரது விவசாய ஆராய்ச்சிகளுக்காக பிரட்டிஷ் அரசு ராவ் பகதூர் பட்டம் அளித்து கெளரவித்தது. இவர் புகைப்படம் எடுப்பதிலும் மிகுந்த ஆர்வமுடையவராக இருந்துள்ளார். இவர் எடுத்த புகைப்படங்கள் இவருக்கு பெரும் புகழைப் பெற்றுக் கொடுத்தது. இதன் காரணமாக 1909 ஆம் ஆண்டு பிரிட்டிஷ்ஷில் உள்ள அரசுக் கலைச் சங்கத்தின் அங்கத்தி னராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அபிரகாம் பண்டிதர் பல்வேறு கலைகளிலும் அறிவுத் தேடலிலும் ஆழ்ந்த ஈடுபாடுமிக்க வராகவே இருந்துள்ளார். தனக்குள் இயல்பாக இருந்த இசையார்வத்தை மேலும் வளர்த்துக் கொண்டார். திண்டுக்கல் சடையாண்டி பட்டரிடம் ஆபிரகாம் பண்டிதர் முறையாக இசை பயின்றார். பிறகு தஞ்சையில் ஒரு நாதஸ்வர வித்துவானிடமும் இசை கற்றார். ஆர்மோனியம், ஆர்கன், வீணை, பிடில் முதலிய வாத்தியங்களை வாசிக்கவும் கற்றுக் கொண் டார்.
இசை ஆர்வமும் இசைப் புலமையும் ஆய்வு நோக்கும் ஆபிரகாம் பண்டிதரை இசையியல் பற்றிய ஆய்வாளராக படிப்படியாக வளர்த்தது. தமிழகத்தில் தெலுங்கு மொழியை முக்கிய மாகக் கொண்டு கர்நாடக சங்கீதம் என்ற பெயரில் பிரபலமாக இருக்கும் இசைமரபு உண்மையில் பழந்தமிழ் இசை மரபே என்ற எண்ணம் ஆபிரகாம் பண்டிதருக்கு ஏற்பட்டது.
தெலுங்கு, சமஸ்கிருதம், கன்னடம் ஆகிய மொழிகளில் அமைந்துள்ள கீர்த்தனைகளையும், பாடல்களையும் பொருள் தெரியாமல் பாடுவ தினால் சங்கீதத்தில் அர்த்தபாவம் என்ற மேலான பாவத்தில் விருத்தி செய்ய முடியாமல் இருப்பதை ஆபிரகாம் பண்டிதர் உணர்ந்தார். இயற்றமிழைக் கேட்டும் வாசித்தும்கூட அதன் பொருளை உணர முடியாத ஒருவர் இசைத் தமிழை கேட்கும் போது அதன் பொருட் சுவையை முற்றிலும் உணர்வது உறுதி.
பொருளின்றி இனிய ஓசையை மட்டும் அந்நிய மொழிகளில் கேட்டு இன்புறுவதைவிட, இசை யின் இனிய ஓசையோடு பொருளுமறிந்து பக்திரசமான கீர்த்தனைகள் பாடப்படுமானால் கேட்பவர்கள் யாவரும் நற்பயனடைவார்கள் என்பதை உணர்ந்தார். இதற்காக ஆபிரகாம் பண்டிதர் தானே தமிழில் பல பாடல்களை இயற்றி அவற்றிற்கு இசை அமைத்தார். இதைத் தவிர சாகித்யமில்லாத சுர ஜாதிகளுக்கும் வர்ணங்களின் ஒத்தக்கட்டை சுரங்களுக்கும், பிறமொழிகளிலுள்ள சாகித்யங்களுக்கும் தமிழில் எளிதான நடையில் பாடல்கள் இயற்றினார்.
இப்பாடல்கள் அடங்கிய நூல் 'கருணாமிர்த சாகரத் திரட்டு' என்ற பெயரில் 1907 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. தனக்குள் இயங்கும் இசை ஆர்வத்தை தனது பிள்ளை களிடம் வளர்ந்தார். பல ஆசிரியர்களிடம் முறையான இசைப் பயிற்சி வழங்க ஏற்பாடு செய்து கொடுத்தார்.
1910 முதல் 1914 வரையிலான காலகட்டத்தில் ஆபிரகாம் பண்டிதர் ஆறு இசை மாநாடுகளைத் தஞ்சையில் நடத்தினார். 1912 இல் தஞ்சையில் சங்கீத வித்யா மகாஜன சங்கத்தை நிறுவினார். ஐரோப்பிய இசை வல்லுநரான பேராசிரியர் தஞ்சை ஏ.ஜி. பிச்சைமுத்து அவர்களின் மாணாக்கராகி மேற்கத்திய இசையையும் கற்றுத் தேர்ந்தார். இந்த இசை மாநாடுகளில் பல்வேறு இசை நிபுணர்களையும் பாடகர் களையும் இசைப் புலமையாளர்களையும் அழைத்து விரிவாக உரையாடினார். இசையின் நுணுக்கங்களை ஆழ்ந்து கற்றார். இந்த இசை மாநாடுகள் முழுக்க ஆபிரகாம் பண்டிதரின் சொந்தச் செலவில் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
ஆபிரகாம் பண்டிதர் தமது ஆய்வுகளை சுரம் குறித்த அடிப்படைகளை ஒட்டி தொடங்கினார். வேங்கட மகியின் 'சதுர்த்தண்டி பிரகாசிகை' என்ற நூலில் 72 மேளகர்த்தா ராகங்களை பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. மேளகர்த்தா என்றால் தாய்ப் பண். அதாவது அடிப்படை ராகம் என்று பொருள். இது பிற ராகங்களைப் படைக்கும் தன்மை உடைய generative ராகம். ஜன்யராகம் என்றால் மேளகர்த்தா ராகத்திலிருந்து பிறந்தது. இந்த 72இல் 16 சுத்த மத்திம ராகங்களும் 16 பிரதி மத்திம ராகங்களுமாக 32 ராகங்களுக்கு மட்டுமே உண்மையில் மேளகர்த்தா ராகங் களாக விளங்கக் கூடிய தகுதி உண்டு என்று ஆபிரகாம் பண்டிதர் கண்டார். பிற ராகங்கள் நடைமுறையில் இல்லை. பாடினால் சுகமாகவும் இல்லை. புது ராகங்களை உருவாக்கும் விரிவுடனும் இல்லை. அது ஏன் என்ற கேள்வி எழுப்பினார்.
ஆகவே ஆபிரகாம் பண்டிதர் சுருதியைப் பற்றி ஆராயத் தொடங்கினார். நமது சுருதியமைப்பு முறையினை பின்னப்பகுப்பு முறை (Just infonation) என்கிறோம். ஏழு ஸ்வரங்கள் 12 ஸ்வரத் தாளங்களுள் ஒவ்வொன்றுக்கும் இரண்டு வீதம் 24 சுருதிகள், அல்லது கால் சுரங்கள். ஆனால் சாரங்க தேவரின் 'சங்கீத ரத்னாகரம்', பரதரின் 'நாட்டிய சாஸ்திரம்' முதலியவை 22 சுருதிகள் என்கின்றன. சமபங்கு முறைப்படி 24தான் வரவேண்டும். இதனால் ஆபிரகாம் பண்டிதர் தமிழ் இசை மரபை விரிவாக ஆராய்ந்து விளக்குகிறார். நமக்கும் 24 சுருதிதான் இருந்தது. நடுவே 22 என்று குறிப்பிடப்பட்டது. அது தவறான புரிதல் மட்டுமே.
அடுத்து ஆபிரகாம் பண்டிதர் 'ராகபுடம்' குறித்து விரிவாகப் பேசுகிறார். நம்முடைய மரபிலே ராகங்கள் எப்படி உருவாகின்றன. எப்படி ராகசஞ்சாரம் செய்யலாம் என்று முதன்முதலில் கண்டுபிடித்துச் சொன்னவர் ஆபிரகாம் பண்டிதர்தான். உண்மையில் அவருக்கு முன் ராக சஞ்சாரம் குறித்து ஒரு மரபான திறமை மட்டுமே நமக்கு இருந்தது.
சுவரங்கள் ஏன் எதற்கு ஒரு குறிப்பிட்ட முறைப்படி அமைக்கப்பட்டுள்ளன என்று தெரி யாது. இதை ஆபிரகாம் பண்டிதர் கண்டுபிடித்து சொன்னார். இதை அறியாத தனாலேயே நம்முடைய இசையில் முன்னகர்வு இல்லாமல் இருந்தது. புதிய புதிய சாத்தியங்கள் அருகி காணப்பட்டன. பதினைந்து நிமிடத்துக்கு மேலே ஒரு ராகத்தை ஆலாபனை செய்தால் அலுப்பு ஏற்படும் நிலைமை இருந்தது.
'ராகபுட' முறையை பண்டிதர் கண்டறிந்த போது ஒன்று தெளிவாகியது. அது காலம் காலமாக தமிழில் இருந்து வந்ததுதான். அதாவது இந்த ராகங்கள் அனைத்துமே தமிழ் மரபில் உள்ளவை என்ற புரிதல் கிடைத்தது.
பண்கள்தான் ராகங்களாக காலப்போக்கில் வளர்ச்சி அடைந்தன. பண் என்பது பாடலின் இசை வடிவம். அதை மெட்டு என்று கூறலாம். நான்கு நிலத்திற்கும் உரிய பெரும் பண்களை பாலை என்கிறோம். அதை வடமொழியில் ஜாதி என்பார்கள். அதாவது உயர்ந்தது என்று பொருள்.
நமது பழந்தமிழ் இலக்கியங்களில் ஏழ்பெரும் பாலை என்பது அடிக்கடி குறிப்பிடப்படுகிறது. சிலம்பு (உரையாசிரியர்கள்) கூறும் வட்டப் பாலை முறையில் ஏழ்பெரும் பாலைகளை அமைத்து கூறியவர் ஆபிரகாம் பண்டிதர். அந்த ஏழ்பெரும் பாலைகளாவன
1. செம்பாலை
2. அரும்பாலை
3. கோடிப்பாலை
4. மேற்செம்பாலை
5. படுமலைப்பாலை
6. செவ்வழி பாலை
7. விரிம்பாலை
ஆபிரகாம் பண்டிதர் இந்த ஏழு பண்களையும் வட்டப்பாலை முறையில் அமைத்துக் காட்டி னார். இசையின் 12 சுவரத் தாளங்களை 12 இராசி வீடுகளில் கொண்டு வட்டத்தை 12 உட்பிரிவுகளாக பிரித்தார். அதாவது அரை வட்டம் கால்வட்டம் என்று குறுக்காக அவற்றில் 12 சுரத்தானங்களை அமைத்து ஏழ்பெரும் பாலைகளைக் கண்டுபிடித்துக் காட்டினார்.
ஆக ஆபிரகாம் பண்டிதர் பாடப்படும் இசையை இலக்கணப்படுத்தியவர் அல்லர். மாறாக அவர் இசையின் வேர்களைத் தேடிக் கண்டடைந்தார். அதன் மூலம் இந்த இசையின் அடிப்படை அமைப்பினை மீள்கண்டுபிடிப்புச் செய்தார். அந்த அடிப்படை தெரியும் போது தான் புதிது புதிதாகப் பாடுவதற்கான வாய்ப்புகள் ஏராளமாக உருவாகும். பொதுவாக பண்டிதரின் ஆர்வமெல்லாம் இசையின் அறியப்படாத அடிப்படை அம்சங்கள் மீதுதான் இருந்தது.
வெறும் விருப்புறுதி மனநிலையில் மட்டும் பண்டிதர் ஆய்வு செய்யவில்லை. சுருதி குறித்த ஆய்வுகளில் விஞ்ஞானியின் மனநிலையே இருந்தது என்பதை இசை வல்லுநர்கள் ஆராய்ச்சியாளர்களான வி.பா.க.சுந்தரம், எஸ். இராமநாதன் போன்றோர் மிகத் தெளிவாகக் கூறுகின்றனர். ஒலியின் அளவு விகிதம்தான் சுருதி என்ற புரிதலை ஆபிரகாம் பண்டிதர் தெளிவாக முன்வைக்கின்றார்.
ஆக ஆபிரகாம் பண்டிதர் பண்டைய இலக்கியங்களை முதல் ஆதாரங்களாகக் கொண்டு விரிவாக நிறுவியிருக்கிறார். தமிழ் நிலைப்பட்ட வரலாற்றியல் நோக்கு கண்டறியக் கூடியதாக இருந்தது. மேலும் சிலப்பதி காரத்தில் இன்றைய கர்நாடக இசையில் மூல இலக்கணங்களாக இருப்பதை பண்டிதர் சுட்டிக் காட்டினார்.
ஆபிரகாம் பண்டிதர் தமிழிசையே வடக்கே இந்துஸ்தானி இசை என்ற பெயரில் விளங்கு கிறது என்று நிரூபித்தார். 20 முதல் 24 வரை மார்ச் 1916 இல் பரோடாவில் நடைபெற்ற அகில இந்திய இசை மாநாட்டுக்குச் சென்று தன் முடிவுகளை எடுத்துப் பேசினார். இவரது கண்டுபிடிப்புகளை இவரது இரு மகள்கள் வீணையில் இசைத்துக் காட்டி நிரூபித்தனர்.
இருபதாம் நூற்றாண்டின் தமிழிசையின் முன்னோடியாக ஆபிரகாம் பண்டிதர் கருதப்பட வேண்டிய அளவிற்கு ஆய்வுப்பரப்பை நமக்குத் தந்துள்ளார். அத்தகைய இசையியல் ஆய்வாளர் 31.8.1919 இல் தனது ஆய்வுப் பார்வையை நிறுத்திக் கொண்டார். இவர் முடிக்காமல் விட்டிருந்த பகுதிகளை முடித்து இவரது மகளான திருமதி மரகதவள்ளி துரைப் பாண்டியன் 'கர்ணாமிர்த சாகரம்' இரண்டாம் பகுதியை நிறைவு செய்தார்.
மறைக்கப்பட்ட தமிழ்க் கலாசார வரலாற்றில் தமிழிசையின் மீள் கண்டுபிடிப்புக்கு காரண கர்த்தா ஆபிரகாம் பண்டிதர். இவரது ஆய்வு முடிவுகள் இசையியலுக்கு தமிழிசை வழங்கும் புதிய மடைமாற்றமாகும்.
ஆப்ரகாம் பண்டிதர் (1859-1919)
Reviewed by Bright Zoom
on
September 27, 2021
Rating:
No comments: