சந்திராயன் 3 எப்படிஏவப்படும்? ரோவர்,லேண்டர் நிலவில் எப்படி இறங்கும்? விண்வெளி அதிசயம்! Chandrayaan-3: From LVM 3 to Rover and Lander, All you need to know about the project
சந்திராயன் 3 எப்படிஏவப்படும்? ரோவர்,லேண்டர் நிலவில் எப்படி இறங்கும்? விண்வெளி அதிசயம்!
Chandrayaan-3: From LVM 3 to Rover and Lander, All you need to know about the project
★ சென்னை: 4 வருடங்களுக்கு முன் இந்தியர்களின் இதயத்தை நடு இரவில் உடைத்த சந்திரயான் திட்டத்தின் அடுத்த ப்ரொஜெக்ட் நாளை விண்ணில் ஏவப்பட உள்ளது.
★ இந்த திட்டதிற்கு சந்திராயன் 3 என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இது என்ன திட்டம்? ஏன்? எப்படி அனுப்பப்படுகிறது என்று இங்கே பார்க்கலாம்!
சந்திராயன் திட்டம் என்றால் என்ன?
★ நிலவை ஆய்வு செய்யும் இந்தியாவின் விண்வெளி ஆய்வு அமைப்பான இஸ்ரோவின் திட்டம்தான் சந்திராயன். சந்திரனை ஆய்வு செய்வதால் இந்த பெயர் வைக்கப்பட்டு உள்ளது.
★ இந்தியா இதுவரை இரண்டு சந்திராயன் மிஷன்களை மேற்கொண்டு உள்ளன. இதில் முதல் சந்திராயன் மிஷன் வெற்றிபெற்றது. அது அக்டோபர் 22ம் தேதி 2008ல் கொண்டு ஏவப்பட்ட திட்டம் ஆகும். நிலவில் இருக்கும் தண்ணீரை கண்டுபிடிக்க முக்கிய காரணமாக அமைந்தது இந்த சந்திராயன் 1 மிஷன்தான்
சந்திராயன் 2 தோல்வியா?
இதையடுத்து சந்திராயன் 2 விண்ணில் ஏவப்பட்டது. ஜூலை 22, 2019ம் ஆண்டு நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 2 விண்ணில் செலுத்தப்பட்டது. சந்திராயன் 2ல் இருக்கும் ஆர்பிட்டர் அதே வருடம் செப்டம்பர் மாதம் 6ம் தேதி நிலவின் வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிறுத்தப்பட்டது. ஆனால் அதன் லேண்டர் விக்ரம் தரையில் இறங்கும் முன் 2.1 கிமீ தூரத்தில் சிக்னலை இழந்தது. அதன்பின்னர்தான் நிலவின் தென் துருவ பகுதியில் சந்திரயான் 2ன் விக்ரம் லேண்டர் விழுந்து நொறுங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. 3 மாதமாக இஸ்ரோ தீவிரமாக தேடியது. அதன்பின் இதை நாசா கண்டுபிடித்தது. நாசாவின் LROC (Lunar Reconnaissance Orbiter) விண்கல ஆய்வு கருவி மூலம் இது கண்டுபிடிக்கப்பட்டது. லேண்டர் இறங்காத காரணத்தால் உள்ளே இருக்கும் ரோவரும் வெடித்து சிதறியது. ஆனாலும் இந்த திட்டம் முழு தோல்வி கிடையாது. காரணம் ஆர்பிட்டர் வெற்றிகரமாக அடுத்த ஒன்றரை வருடம் நிலவை சுற்றியது.
சந்திராயன் 3 திட்டம்: இந்த நிலையில்தான் சந்திராயன் 3 திட்டம் தற்போது செயல்படுத்தப்பட உள்ளது. விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் இரண்டையும் மீண்டும் நிலவில் வெற்றிகரமாக களமிறக்கும் திட்டத்தில் இஸ்ரோ களமிறங்கி உள்ளது. தற்போது சந்திராயன் 3 திட்டத்தில் சந்திராயன் 2ல் இருந்தது போல ஆர்பிட்டர் இருக்காது. மாறாக விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் இரண்டு மட்டுமே உள்ளது. இதில் ப்ரோபல்ஷன் மாடல் என்ற ஒரு உந்த கூடிய ப்ரோபல்ஷன் என்ற பகுதியும் உள்ளது. இதுதான் இந்த லேண்டர், ரோவரை நிலவிற்கு கொண்டு செல்லும்.
எந்த ராக்கெட்டில் செல்லும்?
இந்தியாவின் ராக்கெட்டுகளில் பாகுபலி ராக்கெட் என்று அழைக்கப்படும் ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் அதாவது Geosynchronous Satellite Launch Vehicle Mark III ராக்கெட். இதை இப்போது எல்விஎம் 3 என்று அழைக்கிறார். இது ஒரு 3 ஸ்டேஜ் ராக்கெட் ஆகும். முதல் இரண்டு சாலிட் பூஸ்டர். அதாவது இரண்டு திட எரிபொருள் கொண்ட பூஸ்டர்கள் இருக்கும். அதன்பின் திரவ நிலையில் இருக்கும் இரண்டாவது எஞ்சின் இருக்கும். முதல் இரண்டு திட திரஸ்ட் பூஸ்டர்கள் தொடக்கத்தில் ராக்கெட் மேலே செல்வதற்கு பயன்படும். இரண்டாவது கட்டத்தில் குறிப்பிட்ட வட்ட பாதையில் ராக்கெட்டை கொண்டு செல்லும் கடைசி கட்ட பயணத்திற்கு திரவ பூஸ்டர் பயன்படுத்தப்படும். அதன்பின் கடைசியாக கிரையோஜெனிக் ஸ்டேஜ் எனப்படும் கடைசி கட்ட ஸ்டேஜ் எஞ்சின் இயங்கும். இது மட்டும் 28 டன் எடைகொண்டது . இது முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட கிரையோஜெனிக் எஞ்சின் ஆகும். இதனால் 4 ஆயிரம் கிலோ கிராம் எடையை கூட சுமந்து செல்ல முடியாது.
என்னென்ன பாகங்கள் உள்ளன?
இந்த சந்திராயன் 3ல் பின்வரும் 2 முக்கியமான பாகங்கள் உள்ளன.
ப்ரோபல்ஷன் மாடுல்: இது சந்திராயன் ராக்கெட்டின் தலை பகுதியில் இருக்கும் மொத்த அமைப்பில் கீழ் உள்ள பகுதி ஆகும். சந்திராயன் 3 பூமி வட்டப்பாதையில் நிறுத்தப்பட்ட பின் அதை நிலவை நோக்கி கொண்டு செல்ல அவ்வப்போது பாதை மாற்ற பயன்படும் சிறிய எஞ்சின்தான் இந்த ப்ரோபல்ஷன் மாடுல். பூமியின் வட்டப்பாதையில் இருந்து நிலவில் இருந்து 100 கிமீ தூரம் உள்ள வட்டப்பாதை வரை சந்திராயன் 3வை கொண்டு செல்ல போவது இந்த ப்ரோபல்ஷன் மாடுல்தான். இது ஒரு பாக்ஸ் போல கீழே ராக்கெட் போன்ற திரஸ்டர்கள் கொண்ட அமைப்பு ஆகும். இதில் திரஸ்டர்களுக்கு சார்ஜ் கொடுப்பதற்காக சோலார் பேனல் இருக்கும். இதில்தான் லேண்டர் பொருத்தப்பட்டு இருக்கும். அதன் உள்ளே ரோவர் இருக்கும். இதில் லேண்டர், ரோவர் தவிர்த்து ஷேப் - Spectro-polarimetry of Habitable Planet Earth (SHAPE) எனப்படும் அமைப்பும் உள்ளது. இது பூமியின் அளவை குறித்த ஆய்வை நிலவின் வட்டப்பாதையில் இருந்து மேற்கொள்ளும்.
சந்திராயன் 3 லேண்டர்: சந்திரயான்-3 விண்கலத்தில் விக்ரம் (சமஸ்கிருதத்தில் "வீரம்") என்ற பெயரிடப்பட்ட லேண்டர் உள்ளது. இது பாக்ஸ் போன்ற தோற்றம் கொண்டது ஆகும். உள்ளே இருக்கும் பிரக்யான் ரோவரை நிலவில் களமிறக்க இதுதான் உதவும். இது தரையிறங்கும் பகுதியில் வெப்ப கடத்துத்திறனைப் பதிவுசெய்யவும் மற்றும் நிலநடுக்கங்களை உணரவும் உதவும். இதில் நான்கு கால் பகுதிகள் இருக்கும். அதேபோல் நான்கில் பக்கமும் திரஸ்டர்கள் இருக்கும். இது 800 நியுட்டன் பவரை கொடுக்க கூடியது.
ரோவர்: இதன் உள்ளேதான் சந்திராயன் 3ன் ரோவர் இருக்கும். பிரக்யான் (சமஸ்கிருதத்தில் "ஞானம்"), விக்ரமில் இருந்து வெளியே வரும். அதன் உள் கேமராக்கள் சந்திரனில் இருக்கும் தடங்கல்களை பார்த்து அதற்கு ஏற்ப கவனமாக நகர்ந்து செல்லும். இது லேண்டர் விக்ரமில் இருந்து விலகி சென்றாலும் எல்லா நேரமும் விக்ரமின் கண் பார்வையில் இருக்கும். நிலவின் தரைப்பகுதி, மண் பகுதியை இது ஆய்வு செய்யும்.
இது ஒரு சின்ன சோதனை கூடம் போலவே செயல்படும். இது நிலவின் மேல் பகுதி ஆய்வு, சாம்பிள் ஆய்வு, சாம்பிள் எடுத்து வைத்துக்கொள்வது, சில புகைப்படங்களை பூமிக்கு அனுப்புவது, உள்ளே இருக்கும் ஜியோலொஜிக்கல், கெமிக்கல் ஆகியவற்றை ஆய்வு செய்யும். இதில் மொத்தம் 6 சக்கரங்கள் இருக்கும்.
எப்படி செல்லும்?
சந்திராயன் 3 எப்படி செல்லும் என்று எளிதாக பார்க்கலாம். ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் இதை சுமந்து செல்லும். பூமியில் இருந்து கிளம்பி பூமியின் வட்டப்பாதையில் 179 கிமீ தூரத்தில் நிறுத்தப்படும். செல்லும் பாதையில் வரிசையாக ராக்கெட்டின் பாகங்கள் கழன்று கொள்ளும். அதன்பின் ப்ரோபல்ஷன் மாடல் அதன் மேலே ரோவர், லேண்டர் இணைக்கப்பட்ட பகுதி மட்டும் வட்டப்பாதையில் இறங்கும். இது பூமியின் வட்டப்பாதையை நீள் வட்டத்தில் சுற்றி சுற்றி 23 நாட்களில் மிக நீண்ட சுற்று வட்டப்பாதையை அடையும்.
அதன்பின் 23வது நாளில் ப்ரோபல்ஷன் மாடல் செயல்பட்டு நிலவை நோக்கி உந்தப்படும். அதன்பின் 7 நாட்கள் நிலவை நோக்கி இது பயணம் மேற்கொள்ளும். பின் நிலவின் வட்டப்பாதையை அடைந்ததும் 13 நாட்கள் நிலவை சுற்றும். நிலவில் இருந்து 100 கிமீ தூரத்திற்கு சென்ற பின் இந்த ப்ரோபல்ஷன் மாடல் கழன்று கொள்ளும். லேண்டர் மட்டும் ரோவருடன் இணைந்து நிலவை நோக்கி இறங்கும்.

No comments: