தமிழ் கட்டுரைகள் |அன்பின் ஐந்திணைகள் Tamil katturaikal |anpiṉ aintinaikal

தமிழ் கட்டுரைகள் |அன்பின் ஐந்திணைகள்

Tamil katturaikal anpiṉ aintinaikal 

அன்பின் ஐந்திணைகள்:

★ தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த நூற்றாண்டு சங்க காலம் எனப்படுகின்றது.

★ சேரர், சோழர், பாண்டியர் எனப்படுகின்ற முடியுடை மூவேந்தர்களும் பாரி, அதியமான், ஓரி, குமணன் போன்ற குறுநில மன்னர்களும் நல்லாட்சி புரிந்தனர்.

★ மன்னனுக்கும், மக்களுக்கும், புலவர்களுக்கும் இடையே நல்லுறவு காணப்பட்டது. இதனால் இக்காலப் புலவர்கள் அதிக இலக்கியங்களைப் படைத்தனர். அந்த வகையில் சங்க இலக்கியங்கள் கூறுகின்ற அன்பின் ஐந்திணைகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

ஐந்திணைகள் :

குறிஞ்சி – புணர்தல்

முல்லை – இருத்தல்

மருதம் – ஊடல்

நெய்தல் – இரங்கல்

பாலை – பிரிதல், உடன்போக்கு

குறிஞ்சி

★ மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி எனப்படும். இங்கு வாழ்ந்தவர்கள் குறவர் என அழைக்கப்பட்டனர். வேட்டையாடுதல், தினை விதைத்தல் இங்கு வாழ்பவர்களின் தொழில் ஆகும்.

★ வேட்டையாடச் சென்ற தலைவனும் தினைப் புனம் காத்து நின்ற தலைவியும் ஒருவரை ஒருவர் கண்டு காதல் கொண்டு புணர்ச்சியில் ஈடுபட்டதால் இந்த நிலத்திற்கு உரிய அக ஒழுக்கமாக புணர்தல் என்ற ஒழுக்கம் பேணப்பட்டது.


முல்லை

★ காடும் காடு சார்ந்த இடமும் முல்லை நிலம் எனப்படும். இங்கு வாழ்ந்தவர்கள் ஆயர்கள் என அழைக்கப்பட்டனர். மந்தை மேய்த்தல், நிலம் காத்தல் என்பன இவர்களது தொழில்கள் ஆகும்.

★ தொழிலின் பொருட்டு நிலம் காக்க எல்லைப் புறங்களில் மாடி வீடு அமைத்து காலம் குறித்து தலைவன் தொழிலுக்கு செல்வது உண்டு.

★ இதனால் குறித்த காலம் வரும் வரை தலைவி தன்னுடைய இல்லத்தில் கற்பு வழுவாது தலைவனுக்காக காத்துக் கொண்டு இருப்பதால் இந்த நிலத்திற்கு உரிய அக ஒழுக்ககம் இருத்தல் எனப்பட்டது.

மருதம்

★ வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம் எனப்படும். இங்கு வாழ்ந்தவர்கள் உழவர்கள் என அழைக்கப்பட்டனர். இவர்களது தொழில் உழவுத் தொழில் ஆகும். இந்த தொழிலானது குறிப்பிட்ட காலத்தில் நிறைவடைவதால் ஓய்வுக் காலம் அதிகமாகக் காணப்பட்டது.

★ இந்த ஓய்வுக் காலத்தில் ஆடவர்கள் பரத்தையர் வீடுகளுக்குச் சென்று ஆடிப்பாடி  மகிழ்வர். இதனால் தலைவி தலைவன் மீது கோபம் கொள்வாள்.

★ அந்தக் கோபமானது பாணர்களாலும், புதல்வர்களாலும், செவிலித்தாய் முதலியவர்களால் தீர்க்கப்படுவதால் அந்தக்கோபம் பொய்க்கோபமாக மாறிவிடுகிறது. இதனால் இந்த நிலத்திற்கு உரிய ஒழுக்கமாக ஊடல் காணப்படுகின்றது.

நெய்தல்

★ கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் என அழைக்கப்படும். இங்கு வசிப்பவர்கள் பரதவர் என அழைக்கப்பட்டனர். மீன் பிடித்தல், உப்பு விளைவித்தல், முத்து எடுத்தல் போன்றன இங்கு வாழ்பவர்களின் வாழ்வாதார தொழில்கள் ஆகும்.

★ தொழிலின் நிமித்தம் தலைவன் படகேறி கடலுக்கு செல்வான். அவன் திரும்பி வரும் வரை தலைவி அவனுக்காக ஏங்கி இரங்கிக்கொண்டு இருப்பாள். அதனால் இந்த நிலத்திற்கு உரிய அக ஒழுக்கமாக இரங்கல் காணப்படுகின்றது.

பாலை

★ வரண்ட நிலமான பாலைவனத்தால் சூழப்பட்ட நிலம் பாலை எனப்படும். அங்கு வாழ்ந்தவர்கள் மறவர் என அழைக்கப்பட்டனர்.

★ “முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து பாலைவனம் உருவானதாக தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது.

★ இந்த நில மறவர்கள் களவெடுத்தல், வழிப்பறி செய்தல் முதலான தொழில்களில் ஈடுபட்டனர். இந்த தொழிலுக்காக தலைவன் தலைவியை நீண்ட நாட்கள் பிரிந்து வாழ வேண்டி ஏற்படும்.

★ இதனால் இந்த நிலத்திற்கு உரிய ஒழுக்கமாக பிரிதல் காணப்படுகின்றது. பிரிதலை தாங்க முடியாத தலைவி உடன் செல்வதும் உண்டு. அத்தோடு பிற நிலத்தவர்களூடாக உடன் செல்வதும் உண்டு. இதனால் பாலைவனத்தில் உடன்போக்கு என்னும் ஒழுக்கமும் காணப்படுகின்றது.

★ இவ்வாறாக சங்க காலத்தில் குறிஞ்சி நிலத்தில் புணர்தலும், முல்லையில் இருத்தலும்,  மருத நிலத்தில் ஊடலும் , நெய்தலில் இரங்கலும்,  பாலைவனத்தில் பிரிதலும் உடன்போக்குமாக அன்பின் ஐந்திணை ஒழுக்கங்கள் ஐவகை நிலங்களிலும் காணப்பட்டுள்ளன.


தமிழ் கட்டுரைகள் |அன்பின் ஐந்திணைகள் Tamil katturaikal |anpiṉ aintinaikal தமிழ் கட்டுரைகள் |அன்பின் ஐந்திணைகள் Tamil katturaikal |anpiṉ aintinaikal Reviewed by Bright Zoom on December 28, 2023 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.