தெரிந்த பெயர் தெரியாத தகவல்கள் - இலான் மஸ்க்
இது டெக் காலம். கணினி மற்றும் தொழில்நுட்பமானது மனித வளர்ச்சியை சரியான பாதையில் மட்டுமின்றி, அடுத்த கட்டத்திலும் கொண்டு செல்கிறது. வளர்ந்துவரும் இந்த தொழில்நுட்பத்தின் காரணமாக, பல மாணவர்கள் அந்தத் துறையை நோக்கி பயணித்த வண்ணமாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், டெக் பத்திரிகைகளில் இலான் மஸ்க்கின் 'ஹைப்பர்லூப்' திட்டத்தை எதிர்பார்க்கும் பல கட்டுரைகள் வெளிவரும் வண்ணமாகவே இருந்து வருகிறது. தவிர, செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்வதற்கு சாத்தியக்கூறுகள் இருக்கின்றன என்பதை கண்டறிந்த அடுத்த சில மாதங்களில், மனிதன் வாழ்வதற்கு எவ்வகையான வீடுகள் மற்றும் மின் பொருள் வைக்கலாம் வரை திட்டமிட்டிருக்கிறார் இவர். நாளைய தொழில்நுட்ப வல்லுநர்களின், முன் மாதிரி இலான் மஸ்க்கைப் பற்றி இந்தக் கட்டுரையில் தெரிந்துக்கொள்வோம்.
தென் ஆப்பிரிக்கா முதல் கனடா வரை
இலான் ரீவ் மஸ்க் 1971ஆம் ஆண்டில் தென் ஆப்பிரிக்காவில் பிறந்தார். கனடா வம்சாவளி தாய்க்கும், தென் ஆப்பிரிக்கா தந்தைக்கும் பிறந்த இவர், தென் ஆப்பிரிக்காவில் வளர்ந்தார். பள்ளி படிக்கும் காலத்திலிருந்தே, தானாக கற்கும் திறன் இலானிடம் காணப்பட்டது. தானாக கற்பது மட்டுமின்றி, சில சமயம் தன்னுடைய சிந்தனைகளில் தொலைந்து போய்விடுவார். இலானின் பெற்றோர்கள் இவருக்குக் காது கேட்காது என்றும் எண்ணினர். ‘நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே, எங்கேயோ பார்த்துக்கொண்டே இருப்பான். காது கேட்கவில்லையோ என்று பயந்து மருத்துவரிடம் அழைத்து சென்று, ஒரு சின்ன அறுவைசிகிச்சையும் செய்தாயிற்று. அதன் பின்னும், இலான் மேலே பார்த்துக்கொண்டேதான் இருந்தான். பின்புதான் தெரிந்தது, அவன் எதையோ யோசித்துக்கொண்டிருக்கான்’ என்று ஒருமுறை இலானுடைய தாயார் பகிர்ந்துக்கொண்டுள்ளார்.
அதீத அறிவும் சிந்தனையும் கொண்ட இலான், கம்ப்யூட்டர் புரோகிராமிங் முறைகளை தானாக கற்க தொடங்கினார். புத்தகங்களை அதிகமாக படித்தும், மற்ற மாணவர்களிடம் அதிகமாக பேசாத குணம் கொண்ட இலான், தன்னுடைய கவனத்தை கம்ப்யூட்டர் புரோகிராமிங் துறையில் செலுத்தினார். தன்னுடைய 12 வயதிலேயே ஒரு சிறு விளையாட்டை வடிவமைத்து, அதை ஒரு தொழில்நுட்ப பத்திரிகைக்கு 500 அமெரிக்க டாலர் மதிப்புக்கு விற்றார். தற்போது, பிளாஸ்ட்டர் என்ற அந்த விளையாட்டு ஆன்லைனில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. ராக்கெட் மற்றும் விமானங்களைக் கொண்ட அந்த விளையாட்டை வடிவமைத்த இலான், “எனக்கு அப்போதிலிருந்தே ராக்கெட் மற்றும் விண்வெளி சம்பந்தமான விஷயங்களில்தான் ஆர்வம் அதிகம். என்னுடைய இன்றைய திட்டங்களுக்கு சிறு புள்ளியாக அமைந்தது அந்த விளையாட்டு” என்று குறிப்பிடுகிறார். இலானின் பெற்றோர்கள் பிரிந்தமையால், இலான் தென் ஆப்பிரிக்காவிலிருந்து, தன் தாயுடன் கனடாவில் குடியேறினர். பெற்றோர்கள் பிரிந்திருந்தாலும், இலான் தென் ஆப்பிரிக்காவை விட்டு வெளியேற மற்றொரு காரணமும் மறைந்துள்ளது. “ஒரு குறிப்பிட்ட வயதிலிருந்து, தென் ஆப்பிரிக்க ராணுவத்தில் கட்டாயமாக இணைவது அவசியம். ஆனால், அங்கு கறுப்பு இன மக்களை அடிமைப்படுத்தும் விதமாக செய்யப்படும் செயல்கள், என்னால் ஏற்றுக்கொள்ள முடியாதவை. இந்த காரணம்தான் கனடா குடியேற முக்கிய காரணமாக இருந்தது” என்று இலான் சில தருணங்களில் பகிர்ந்துக்கொண்டுள்ளார்.
கல்லூரி படிப்பும் முதல் நிறுவனமும்
கனடாவில் குடியுரிமை பெற்றது மட்டுமின்றி, தன்னுடைய மேல்நிலை பள்ளிப்படிப்பையும் முடித்தார். 1992ஆம் ஆண்டில் ஒண்டாரியோவின் குயின்ஸ் பல்கலைக்கழகத்தில் இரண்டாண்டுகள் படித்த பின், பென்சில்வேனியா பல்கலைக்கழத்தில் இரண்டு இளநிலை பட்டப்படிப்பை முடித்தார். இயற்பியல் மற்றும் வர்த்தக துறையில் இரண்டு தனித்தனி படிப்பை முடித்த இவர், இன்றுவரை இந்த இரண்டு துறைகளையும் வைத்து பல புது கண்டுபிடிப்புகளை உலகுக்கு தந்துக்கொண்டே இருப்பது நாம் எல்லோரும் அறிந்ததே. இந்த சமயத்தில் புது பிஸினஸ் யோசனைகளும் இலானின் மனதில் உதித்தது. தொடர்ந்து 1995ஆம் ஆண்டில் சிலிகான் வேலியின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழத்தில் டாக்டரேட் பட்டப்படிப்புக்கு சேர்ந்தார். ஆனால், இரண்டே நாள்களில், தனது படிப்பை விட்டு நின்று தன்னுடைய பிஸினஸ் கனவுகளை செயலில் கொண்டுவரலானார். “பிஹெச்.டி சேர்ந்த உடனே எனக்கு தெரிந்தது, என்னுடைய சிந்தனைகள் வேறு பரிமாணத்தில் வளர்வதை நான் உணர்ந்தேன். விண்வெளி மற்றும் ராக்கெட் துறை மனித வளர்ச்சியை வருங்காலத்தில் அதிகமாக நிர்ணயிப்பதில் பெரும் பங்காக மாறும் என்பதை உணர்ந்தேன். என்னுடைய யோசனைகளை தொழில்களாக மாற்றவே படிப்பை விட்டு நின்றேன்” என்று இலான் பகிர்கிறார்.
ஸ்டான்ஃபோர்டிலிருந்து இன்று வரை இணையம், கார், விண்வெளி போன்ற பல துறைகளிலும், பல தொழில் தொடங்கியுள்ளார் இலான். இதில் இவர் ஆரம்பித்த முதல் நிறுவனம், ஜிப்2 (Zip2) என்ற இணைய சாஃப்ட்வேர் நிறுவனம். பல இணையதளங்கள் மற்றும் செய்தி தளங்களுக்கு தொடர்பு ஏற்படுத்தித் தரும் நிறுவனமாக இது விளங்கியது குறிப்பிடத்தக்கது. பல பிரபல ஊடகங்களான நியூயார்க் டைம்ஸ் மற்றும் சிகாகோ ட்ரிபியூன் போன்ற இடங்களில் தொடர்புகளை விரிவுபடுத்தியது மட்டுமின்றி, ஜிப்2 வளர முக்கிய காரணமாகவும் மாறினார் இலான். நிறுவனர் பொறுப்புடன் சி.இ.ஓ. பொறுப்பை இலான் வகிக்க எண்ணி ஆரம்பிக்கப்பட்ட சிறு பிரச்னைகளின் காரணமாக, மற்ற உறுப்பினர்களால் வெளியேற்றப்பட்டார். காம்பாக் என்ற நிறுவனத்துக்கு தனது ஜிப்2 நிறுவனத்தை விற்று தனக்கான பங்கை மட்டும் எடுத்துக்கொண்டார். இந்த பங்கானது மட்டுமே, கிட்டத்தட்ட இருபத்திரண்டு மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பு கொண்டது. தான் ஆரம்பித்த முதல் நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்டாலும், இந்த பங்கு மதிப்பை முதலாக கொண்டு அடுத்த நிறுவனத்தை மனம் தளராமல் தொடங்கினார் இலான்.
இணையதளம், விண்வெளி மற்றும் பல
1999ஆம் ஆண்டில் X.com என்ற நிறுவனத்தைத் தொடங்கினார் இலான். இணையம் மூலம் பணத்தை செலுத்துக்கூடிய இந்த சேவையைத் தொடங்கிய இலான், அடுத்த ஆண்டில் கான்பினிட்டி என்ற நிறுவனத்துடன் X.com இணைக்கப்பட்டது. இந்த இணைப்போடு, இன்றைய பேபால் (PayPal) நிறுவனம் பிறப்பெடுத்தது என்றே சொல்லலாம். இதன்மூலம் பேபாலின் துணை நிறுவனர் என்ற பெருமை இலானுக்குச் சேர்ந்தது. ஆரம்பத்தில் இந்த சேவை அதிகளவில் வரவேற்கப்படாமல் இருந்தாலும், இலானின் பிரத்யேக வழிகளின் மூலம், பேபால் மக்களிடையே சேர்க்கப்பட்டது. தொடர்ந்து வாடிக்கையாளர்களின் வருகையும், பயன்படுத்தும் எண்ணிக்கையும் அதிகரித்தது. இலானின் முழு யோசனையில் ஏற்படுத்தப்பட்ட விழிப்பு உணர்வின் காரணமாக, பின்னாளில் பேபால் விற்கப்பட்டதும், பெருமளவான பங்கு இலானை சேர்ந்தது.
2003ஆம் ஆண்டில் இலான், இணையத்திலிருந்து புது அடியை எடுத்துவைத்தார். தான் கற்ற இயற்பியல் மற்றும் வர்த்தகத்தின் கலவையாக ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனத்தை தொடங்கினார். “மனிதனின் வளர்ச்சி மற்றும் அதனால் ஏற்படும் தொழில்நுட்ப வளர்ச்சியைப் பார்க்கும்போது விண்வெளி மற்றும் வேற்று கிரகங்கள் துறையில் பல முன்னேற்றங்கள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்” என்ற இலான், அடிப்படை கொள்கையாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட நிறுவனமே இது. வேறு கிரகங்களின் வாழ்வாதாரம் மற்றும் உயர்தர விண்வெளி மற்றும் கோள் அமைக்கும் முயற்சியில் இலான் முதலில் பல ரஷ்ய மற்றும் அமெரிக்க நிறுவனங்களை தொடர்பு கொண்டார். தன்னுடைய திட்டம் நிறுவனங்களுக்கு பிடித்திருந்தாலும், குறைந்த செலவில் ராக்கெட் செய்யும் சாத்தியக்கூறுகள் இல்லை என்றும், அப்படியே செய்தாலும் அது பாதுகாப்பானதாக இருக்காது என்ற அடிப்படையில் இலானின் இந்த யோசனை பல நிறுவனங்களால் நிராகரிக்கப்பட்டது. பல நிராகரிப்புகளுக்கு பின், இலான் தானே இந்தத் திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டார். பேபாலில் கிடைத்த பங்கு மற்றும் சில பங்குதாரர்களின் உதவியுடன், நவீன வகையான ராக்கெட் மற்றும் கோள்களை வடிவமைத்து ஸ்பேஸ் எக்ஸ் வாயிலாக விண்வெளிக்குச் செலுத்தப்பட்டது. விண்வெளி மையங்களைவிட குறைவான செலவில் ராக்கெட்களை செலுத்த முடியும் என்று தெளிவாக நிரூபித்துக்காட்டினார். அதிவேக ஃபால்கன் மற்றும் நவீன டிராகன் கோள்களை வடிவமைத்து சர்வதேச விண்வெளி மையத்துடன் சேர்ந்து விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டார் இலான்.
2008ஆம் ஆண்டில் புகழ்பெற்ற நாசாவுடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சிக்கான தேவையான பொருள்களைச் சர்வதேச விண்வெளி மையத்துக்கு அனுப்பும் கோள்களை வடிவமைக்கலானார். இதை தொடர்ந்து, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் உலகத்தின் தலைசிறந்த தனியார் செயற்கைக் கோள்கள் வடிவமைப்பு மையமாக மாறியது. மற்ற கிரகங்களில் இருக்கும் உயிர்கள் மற்றும் வாழ்வாதாரங்களை பற்றி விரிவான ஆராய்ச்சி தொடர பல திட்டங்களும், செயற்கைக் கோள்களுக்கான திட்டங்களும் இலான் கைவசத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் அடுத்தகட்டமாக செவ்வாய் கிரகத்தில் மனிதன் வசிப்பதற்கு ஏதுவான பாட் எனப்படும் சிறு குடுவைகளை வடிவைக்க இலான் திட்டமிட்டுள்ளது இங்கு கூடுதல் தகவல்.
வர்த்தக வளர்ச்சியை மட்டுமே வைத்து பல தொழில் இயங்கிவரும் காலத்தில், வருங்காலம் மற்றும் அப்போதைய வளர்ச்சியை கணித்து அதற்கேற்ப தயார் செய்யும் திட்டங்கள் மற்றும் உலகின் தட்பவெப்ப மாற்றத்தை தடுக்கும் சுகாதார சம்பந்தப்பட்ட திட்டங்களே இலானின் தனித்தன்மையை பிரதிபலிக்கிறது. அடுத்த கட்டமாக இலான் தொடங்கியது மாசை கட்டுப்படுத்தும் வகையிலான மின் கார்கள். டெஸ்லா மோட்டார்ஸ் என்ற இந்த நிறுவனத்தில் நவீன மின்சக்தியின் மூலம் இயங்கக்கூடிய கார்கள் தயாரிக்கப்படுகின்றன. இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால், வடிவமைக்கப்படும் கார்கள் இலானின் யோசனை மற்றும் திட்டத்தை கொண்டே உருவாக்கப்படுகின்றன. ஒவ்வொரு கார் வடிவமைப்பிலும் இலானின் கைவண்ணம் இருப்பது இதில் ஆச்சர்யம். அதுமட்டுமின்றி, பின்னாளில் எல்லோரும் மின்னணு கார்களைப் பயன்படுத்தி சுகாதாரத்தைக் காப்பதில் பொறுப்பாக இருப்பதன் முக்கியத்தை வலியுறுத்தும் வகையில், மின்னணு கார்களுக்குத் தேவையான இயந்திரங்கள் மற்ற தனியார் கார் தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் விற்கப்படுகின்றன.
டெஸ்லா மோட்டார்ஸ் ஒருபுறம் இருக்கையில், தன்னுடைய சிலிகான் வேலியின் ராஜ்ஜியத்திலிருந்து இலான் அடுத்து நிறுவியது சோலார் சிட்டி. சூரியசக்திகொண்டு வீட்டுக்கும் பல்வேறு நிறுவனங்களுக்கும் தேவையான மின் பொருளை உற்பத்தி செய்துகொள்ள தேவையான சோலார் பலகைகளை வடிவமைப்பதே சோலார் சிட்டியின் குறிக்கோள். தற்போது அமெரிக்காவில் சோலார் பலகைகளை வடிவமைப்பதில் இரண்டாவது இடத்தில் சோலார் சிட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.
செவ்வாய் கிரக குடுவைகள், டெஸ்லா மோட்டர்ஸின் அடுத்த கார் என்று தன்னுடைய எல்லா நிறுவனங்களிலும் அடுத்த கட்ட திட்டத்தைச் செயல்படுத்த களத்தில் இறங்கியுள்ள இலான் ஹைப்பர்லூப் திட்டத்தையும் வடிவமைத்துள்ளார். “கார், விமானம் தாண்டி ஒரு புது பரிமாணத்தைக் கொண்ட பயண வசதியாக தான் ஹைப்பர்லூப் எனக்கு தெரிகிறது” என்கிறார்.
இரண்டு வெவ்வேறு இடங்களுக்கு குறைந்த நேரத்தில் அதிவேகமாக பயணிக்கக்கூடிய வசதியே ஹைப்பர்லூப்பின் சாராம்சம். மாணவர்களை ஊக்குவித்து அவர்களின் திட்டத்துக்கு செவிசாய்க்கும் இலான், ஹைப்பர்லூப்புக்கான வடிவமைப்பை மாணவர்களிடையே போட்டி போல நடத்தியுள்ளார். தன்னுடைய மற்ற நிறுவனங்களின் முதல்கொண்டு ஹைப்பர்லூப் கச்சிதமாக செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டம் சாத்தியமானால், சென்னையிலிருந்து பெங்களூருக்கு அரை மணி நேரத்தில் செல்லலாம்.
இலான் மஸ்க் ஷாட் தகவல்கள்
• சிறு வயதில் அதிகம் பேசாத குணம்கொண்ட இலான், பள்ளியில் சக மாணவர்களால் எப்போதும் இவரை அடிப்பதுண்டு. விளையாட்டாக செய்யும் செயலாக இருந்தாலும், அது இலானின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தியது என்றுதான் சொல்ல வேண்டும் தவிர, பள்ளியில் அடித்த அடியில் இவருக்கு மூக்கின் சுவர் பாதிக்கப்பட்டு தன்னுடைய 41ஆவது வயதில் அதற்கான சிகிச்சையை செய்து கொண்டார்.
• இளநிலை பட்டப்படிப்பு படிக்கும் காலத்தில், இலான் தன் நண்பருடன் இணைந்து, தனது வீட்டை ஒரு நைட் கிளப்பாக மாற்றினர். வரும் நபர்களிடமிருந்து ஐந்து டாலர் வசூலித்து இலான் தன்னுடைய மற்ற செலவுகளைப் பார்த்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
• இரண்டு முறை விவாகரத்து செய்த இலான், ஜீவனாம்சமாக கிட்டத்தட்ட ஒரு மில்லியன் டாலர்கள் தரவேண்டியதாக ஆயிற்று. அதிகமாக ஜீவனாம்சம் செலுத்திய நபர் என்ற பெயரும் இவருக்கு உண்டு.
• இலான், மட்டுமின்றி அவரது சகோதரி டோஸ்க்கா மஸ்க் மற்றும் சகோதரன் கிம்பால் மஸ்க் இருவரும் தொழில்துறையில் வல்லுநர்கள்.
• 2010ஆம் ஆண்டின் ‘டைம்’ பத்திரிகையில் 100 சக்திவாய்ந்த நபர்களுள் முதல் நபராக இலான் இடம்பெற்றார்.
• மார்வெல் தயாரிப்பு நிறுவனத்தின் ‘அயர்ன் மென்’ படத்தின் டோனி ஸ்டார்க் என்ற கதாபாத்திரம் இலான் மஸ்க் வாழ்க்கை மற்றும் செயல்களை தழுவியே எழுதப்பட்டது. அயர்ன் மென் படம் இலானின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் படமாக்கப்பட்டது கூடுதல் தகவல்.
• டெஸ்லா மோட்டர்ஸ் நிறுவனத்துக்காக இலான் வடிவமைத்த பாகங்கள் காப்புரிமை பெற்றுள்ளது. டெஸ்லா மற்றும் இலான் மஸ்க்கின் சொந்த சொத்துகள்.
சராசரி குடும்பத்தில் செய்வதை போல, ஓர் இடத்தில் வந்த வரவை கொண்டு மற்ற இடத்தில் இருக்கும் செலவைச் சரிக்கட்டுவதை போல, இலான் தன்னுடைய நிறுவனங்களின் பங்கை கொண்டு புது நிறுவனங்களை தொடங்கி இன்று அந்த எல்லா நிறுவனத்தையும் வெற்றிகரமாக நடத்திவருகிறார். உலகின் வளர்ச்சியை மட்டுமே கருத்தில் கொண்டு செய்யப்படும் இவருடைய திட்டங்கள் அனைத்துமே ஆரம்பத்தில் தோல்வியையும் பல நிராகரிப்புகளையும் மட்டுமே சந்தித்தது. தன்னுடைய யோசனைமீது இருந்து அதீத நம்பிக்கையே இலானை பல சவால்களை எடுத்து முயற்சிகளை எடுக்கவும் தூண்டியது.
“தோல்வி என்பது நல்லது. வாழ்க்கையில் தோல்வி இல்லையெனில் நீ எதையுமே செய்யவில்லை, உருவாக்கவில்லை என்று அர்த்தம். தோல்வியே ஒரு புது கண்டுபிடிப்பின் பிறப்பிடம். இதை தான் ஆரம்பத்திலிருந்து இன்று வரை கடைப்பிடித்து வருகிறேன்'' என்ற இலான் மஸ்க் கொள்கை நமக்கும் பாடமே.
தெரிந்த பெயர் தெரியாத தகவல்கள் - இலான் மஸ்க்
Reviewed by Bright Zoom
on
September 26, 2018
Rating:
No comments: