ஹைட்ரோகார்பன் அகழ்வு திட்டங்கள் – ஒரு பார்வை

ஹைட்ரோகார்பன் அகழ்வு திட்டங்கள் – ஒரு பார்வை









பெட்ரோலிய  பொருள் மற்றும் இயற்கை எரிவாயு பொருட்கள் பயன்பாட்டில் உலகின் மூன்றாவது இடம் பிடித்துள்ள இந்தியாவின் ஒட்டுமொத்த இறக்குமதியில் சுமார் 45 சதவிகிதம், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு வாயுக்களே ஆகும். 

இவற்றிற்கான இறக்குமதிக்கென மட்டும் இந்தியா ஆண்டுதோறும் ,₹ 120 பில்லியன்களை செலவழிக்கிறது. இதனால் இந்தியாவின் அந்நியச் செலாவணி பெருமளவில் விரயமாகிறது. இதனைக் குறைத்து உள்நாட்டிலேயே எரிபொருள் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்ட மத்திய அரசு, 2022-ஆம் ஆண்டிற்குள் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுவின் ஒட்டுமொத்த இறக்குமதியில் சுமார் 10 சதவிகிதத்தினை குறைக்க இலக்கு நிர்ணயித்தது. 

இதற்கென ஹைட்ரோ கார்பன் துரப்பன உரிமைக் கொள்கை – 2016 எனும் கொள்கை வெளியிடப்பட்டது. இதன்படி, ‘ 70 ஆயிரம் கோடிகளுக்கும் குறைவான மதிப்பிலான ஹைட்ரோ கார்பன் இருப்பு உள்ள பகுதிகளிலும் அகழ்வுப்பணிகளை மேற்கொள்வதென முடிவெடுக்கப்பட்டது. மேலும் இப்பணிகள் வருவாய் பகிர்வு முறையில் தனியார் நிறுவனங்களிடம் விடப்படும். 

மொத்தம் 46 இடங்களில் ஒப்பந்த அடிப்படையில் ஹைட்ரோ கார்பனை எடுக்க பல்வேறு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டது.

இந்தியாவின் ஒட்டுமொத்த எண்ணெய் மற்றும் எரிவாயுவின் தேவை 226.3 மில்லியன் மெட்ரிக் டன்கள் எனும் நிலையில் 70.4 மில்லியன் மெட்ரிக் டன்கள் மட்டுமே உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்றது. இந்நிலையை மாற்ற அடுத்த 15 ஆண்டுகளில் 34 இடங்களிலிருந்து 40 மில்லியன் டன் எரிபொருட்களையும் 22 பில்லியன் கியூபிக் மீட்டர் எரிவாயுவையும் எடுக்க அரசு இலக்கு நிர்ணயித்தது. 

இந்நிலையில் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக்குழு, 2017 பிப்ரவரி 15 அன்று தமிழகத்தின் நெடுவாசல், காரைக்கால் உள்ளிட்ட நாடுமுழுவதுமுள்ள 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களைச் செயல்படுத்த அனுமதி வழங்கியது. 

இதில் 9 இடங்கள் அசாமிலும், 6 இடங்கள் மும்பை கடற்பகுதியிலும், 5 இடங்கள் குஜராத்திலும், 4 இடங்கள் ஆந்திரப்பிரதேசத்திலும் தமிழகம் மற்றும் புதுவையில் தலா ஒரு இடங்களும் அமைந்துள்ளன.
சில வருடங்களுக்கு முன்பு ஒ.என்.ஜி.சி. (O.N.G.C) நிறுவனம் நாட்டின் பல்வேறு பகுதிகளை ஆராய்ந்து 67 இடங்களில் ஹைட்ரோ கார்பன் இருப்பு உள்ளதைக் கண்டறிந்தது. இதற்கான ஆரம்பகட்டப் பணிகள் துவங்கும் முன்னரே தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசலில் விவசாயிகள் போராட்டம் நடத்தத் துவங்கிவிட்டனர். 

விவசாயிகளுடன் இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் என ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். தமிழக அரசும் நெடுவாசல் திட்டத்தினை எதிர்ப்பதாக உறுதியளித்துள்ளது.
மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறையின் அறிக்கைப்படி, நெடுவாசலில் 10.01 ச. கி.மீ பரப்பளவிலும் காரைக்காலில் 10.04 ச. கி.மீ பரப்பளவிலும் அகழ்வுப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. 

நெடுவாசலில் கச்சா எண்ணெயும் இயற்கை எரிவாயுவும் உள்ளது. அதேபோன்று காரைக்காலில் கச்சா எண்ணெய் மட்டுமே உள்ளது. அதிக ஆழத்திற்கு ஆழ்துளைக்கிணறுகள் அமைக்கப்பட்டு அவற்றின் மூலம் ஹைட்ரோ கார்பன் எடுக்கப்படும். 

அதிக ஆழத்திற்கு ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்படும்பொழுது அருகிலுள்ள நிலத்தடி நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு கடல்நீர் நிலங்களுக்குள் புகுந்துவிடும். இதனால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடிநீர் உப்பாக மாறிவிடும். 

எனவே பயிர் விளைச்சல் பாதிக்கப்படும். இதனால் வேளாண்மையை மட்டும் நம்பியுள்ள விவசாயிகள் பேரிழப்பிற்குள்ளாவர் எனக் கருதப்படுகிறது. மேலும் அகழ்ந்தெடுக்கப்படும் ஹைட்ரோ கார்பன் மண்ணிலும் நீரிலும் காற்றிலும் கலந்து சுற்றுச்சூழல் மாசினை ஏற்படுத்திவிட வாய்ப்புகள் உள்ளன.


உலகின் அதிவேகமாக 
ளர்ந்துவரும் நாடான இந்தியா, தொழில்துறையில் வளரவேண்டிய கட்டாயம் உள்ளது. தொழில்துறையின் முக்கியத்தேவையான ஆற்றலைப்பெற பெட்ரோலியம் மற்றும் அதுசார்ந்த பொருட்களை சார்ந்திருக்கும் நிலையில் இதன் தேவை இறக்குமதியின் மூலம் மட்டுமே பூர்த்தியாவது நாட்டின் பொருளாதாரத்திற்கு நிச்சயம் சிக்கலைக் கொண்டுவரும்.

 இதனால் பெட்ரோலியம் மற்றும் அதுசார்ந்த பொருட்களைப் பெருமளவில் உள்நாட்டு உற்பத்தியின்மூலம் பூர்த்தி செய்ய அரசு முயற்சிப்பது வரவேற்கத்தக்கதுதான். ஆனால் இத்தகைய திட்டங்கள் கடற்பகுதிகளிலும், பயனற்ற நிலங்களிலும், வேளாண்வளம் குறைந்த பகுதிகளிலும் மேற்கொள்ளப்படும் பொழுது எந்த பிரச்சனையும் இல்லை. 

மாறாக வேளாண்வளம் நிறைந்த பகுதிகளில் இத்திட்டங்களைச் செயல்படுத்துவது இலட்சக் கணக்கானோரின் வாழ்வாதாரத்தினை அழித்துவிடும்.

அரசும், அரசுதரப்பினரும் கூறுவதுபோல் ஹைட்ரோ கார்பன் அகழ்வு திட்டத்தினை செயல்படுத்தும் பொழுது ஏற்படும் பிரச்சனைகள் மிகைப்படுத்திக் கூறப்படுகின்றன என்றால் உண்மைத்தகவல்களை மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும்வகையில் கூறி திட்டத்தினை செயல்படுத்த முனையவேண்டும்.

 சுமார் 50 சதவிகித மக்கள் வேளாண்மையை ஜீவாதாரமாகக் கொண்டுள்ள இந்தியாவில், வறுமையை வென்று அனைத்து தரப்பினரையும் முன்னேற்ற பொருளாதார வளர்ச்சி அவசியம்தான். ஆனால் அது எந்தவகையிலும் பொதுமக்களையும், இயற்கைச் சூழலையும் பாதிக்கும்வகையில் அமைந்துவிடக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.



ஹைட்ரோகார்பன் அகழ்வு திட்டங்கள் – ஒரு பார்வை ஹைட்ரோகார்பன் அகழ்வு திட்டங்கள் – ஒரு பார்வை Reviewed by Bright Zoom on July 04, 2019 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.