குடியுரிமைச் சட்டத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு: கொல்கத்தாவில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் பிரம்மாண்ட பேரணி; ஆளுநர் கண்டனம்

குடியுரிமைச் சட்டத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு: கொல்கத்தாவில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் பிரம்மாண்ட பேரணி; ஆளுநர் கண்டனம்

Bright Zoom today News:
கொல்கத்தா 16 Dec 2019


மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைச் சட்டத்துக்கு நாளுக்கு நாள் எதிர்ப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. மேற்கு வங்கத்தில் தொடர்ந்து 4 நாட்களாகப் போராட்டம் நீடித்து வரும் நிலையில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தாவில் இன்று மிகப்பெரிய அளவில் பேரணி நடந்தது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது.
இந்த சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை மசோதாவில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், முஸ்லிம்களுக்கு இந்த சட்டத்தில் இடம் அளிக்கப்படவில்லை.

கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்களாகக் கருதப்படுவர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த சட்டத்துக்கு வடகிழக்கு மாநிலங்களில், மேற்கு வங்கம், டெல்லி ஆகிய மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகத் தொடர்ந்து 4-வது நாளாக இன்றும் போராட்டம் நீடித்து வருகிறது. கிழக்கு மிட்னாபூர், முர்ஷிதாபாத், மால்டா, நாடியா, நார்த் 24 பர்கானா,ஆகிய பகுதிகளில் இந்த சட்டத்துக்கு எதிராகப் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

மால்டா மாவட்டத்தில் போராட்டக்காரர்கள் ரயில்வே இருப்புப்பாதையில் அமர்ந்து போராட்டம் நடத்தியதால், ரயில் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது. சீல்டா-டைமண்ட் ஹார்பர், சீல்டா நாம்கானா பகுதி இடையே ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இதேபோல ஹல்திய-ஹவுரா, தம்லுக்-ஹால்டியா, ஹவுரா, அம்தா ஆகிய பிரிவுகளிலும் ரயில் சேவை நிறுத்தப்பட்டது.

மாநிலம் முழுவதும் போராட்டம் வலுத்துவரும் நிலையில், கொல்கத்தாவில் திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜி தலைமையில் இன்று முற்பகலில் மிகப்பெரிய பேரணி நடந்தது. இந்த பேரணியில் ஏராளமான திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

மேற்கு வங்க மாநிலத்துக்குள் தேசிய குடியுரிமைச் சட்டத்தைச் செயல்படுத்த அனுமதிக்கமாட்டோம் என்ற கோஷத்துடன் மக்கள் பேரணியாகச் சென்றனர். கொல்கத்தாவின் மையப்பகுதியான ரெட் ரோட் பகுதியில் இருந்து புறப்பட்ட பேரணி 4 கிமீ தொலைவில் உள்ள ஜோராசாகோ தாக்கூர் பாரி பகுதியில் முடிந்தது.

முதல்வர் மம்தா பானர்ஜி பேரணிக்குத் தலைமை ஏற்றுச் சென்றதை ஆளுநர் ஜெக்தீப் தனகர் கடுமையாகக் கண்டித்துள்ளார். அவர் கூறுகையில்," பேரணிக்கு முதல்வர் மம்தா பானர்ஜி தலைமை ஏற்றது சூழலைக் கொந்தளிப்பாகும். இது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது" எனத் தெரிவித்தார்.








குடியுரிமைச் சட்டத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு: கொல்கத்தாவில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் பிரம்மாண்ட பேரணி; ஆளுநர் கண்டனம் குடியுரிமைச் சட்டத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு: கொல்கத்தாவில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் பிரம்மாண்ட பேரணி; ஆளுநர் கண்டனம் Reviewed by Bright Zoom on December 16, 2019 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.