Bright Zoom Today News
அக்டோபர் 06 மாலை நேரச் செய்திகள்
8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - செய்திகள்..!!
உலகச் செய்திகள்
டோக்கியோவில் பேச்சுவார்த்தை:
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோவை டோக்கியோவில் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து இன்று பேச்சுவார்த்தை நடத்தினார்.
இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு:
2020ஆம் ஆண்டு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு பெறுபவர்களின் பெயர்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி கருந்துளை பற்றிய ஆய்வுக்காக ரோஜர் பென்ரோஸ், ரெயின் ஹார்ட் ஜென்சில், ஆண்டிரியா கெஸ் ஆகிய 3 பேருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலச் செய்திகள்
வரும் 15ஆம் தேதி முதல் திரையரங்குகளில்...:
வரும் 15ஆம் தேதி முதல் திரையரங்குகளில் உடல் வெப்ப பரிசோதனை செய்து, ஹேண்ட் வாஷ், சானிட்டைசர் வழங்கியே பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ஒத்திகை:
உத்திரப்பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் வரும் 8ஆம் தேதி விமானப்படை தினம் கொண்டாடப்படவுள்ளது. அதனை முன்னிட்டு அங்கு போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் நடத்திய ஒத்திகை கண்கவரும் வகையில் இருந்தது.
ஸ்விக்கி நிறுவனத்துடன் மத்திய அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்:
டெல்லி, சென்னை உள்ளிட்ட 5 நகரங்களில் ஆன்லைன் மூலம் தெருவோர உணவகங்களின் உணவுகளை விற்பனை செய்வது தொடர்பாக ஸ்விக்கி நிறுவனத்துடன் மத்திய அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
உயர்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிப்பு:
புதிய கல்விக்கொள்கை குறித்து ஆசிரியர்கள், பெற்றோர்கள் தெரிவித்த கருத்துக்களின் சாரம்சங்கள், மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தமிழக உயர்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவிப்பு:
மருத்துவ கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீடு இந்த ஆண்டு கிடைக்குமா? என்பது ஆளுநர் ஒப்புதல் அளிப்பதை பொறுத்துதான் இருக்கிறது என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
பள்ளிகளை திறப்பது குறித்து... அமைச்சர் செங்கோட்டையன் தெரிவிப்பு:
பள்ளிகளை திறப்பதை விட மாணவர்களின் உயிர்தான் முக்கியம் என்றும், பள்ளிகளை திறப்பதற்கான நேரம் இதுவல்ல என்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
மாவட்டச் செய்திகள்
சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு:
வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் சேலம், நீலகிரி, கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
விளையாட்டுச் செய்திகள்
மும்பை இந்தியன்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் இன்று மோதல்:
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
No comments: