பூவின் ஏழு பருவப் பெயர்கள் | Seven Seasonal Names of Flower
Bright Zoom,
பூவின் பருவப் பெயர்கள்!
பூவினை மலர் என்று சொல்வது மட்டுமே நம்மில் பலருக்குத் தெரிந்திருக்கும். ஒரு பூவானது அரும்பி ,மலராகி, மணம் பரப்பி மனங்களைக் கொள்ளை கொள்ளும்வரை எத்தனை எத்தனை மாற்றங்கள் நிகழ்கின்றன.
மாற்றங்கள் மட்டுமா நிகழ்கின்றன? மாற்றங்களுக்கு ஏற்ப பெயரையும் அல்லவா மாற்றிக் கொள்கிறது.
பருவத்துக்கு ஒரு பெயர் தாங்கி ஒவ்வொரு பருவத்தையும் என்னி பார் என்று உற்று நோக்க வைத்து உவகை கொள்ள வைக்கிறது.
கண்களுக்கு விருந்து படைக்கும் மலருக்கு இத்தனை பெயர்களா? வியக்க வைக்கிறது அல்லவா?
எந்த மொழியிலும் இல்லாத சொல்லாளுமை தமிழுக்கு உண்டு என்பதற்கு இந்த ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே போதும்.
அரும்பு , நனை ,முகை,மொக்குள்,முகிழ் , மொட்டு. , போது, மலர் , வீ.,பொதும்பர் , பொம்மல் ,செம்மல் .என மலர் தன்மாற்றங்களுக்கு ஏற்ப பெயர் வைத்திருக்கும் பெயர்கள்தான். எத்தனை! எத்தனை!!
அத்தனையையும் சொல்லும் போதெல்லாம் பூவின் அந்தந்தத் தோற்ற மாற்றம் நம் கண்முன் வந்து விரியும்.
இனி இதனை இப்படித்தான் சொல் வேண்டும். இப்படித்தான் எழுத வேண்டும் என்றஆர்வத்தைத் தூண்டும். பழந்தமிழ் இலக்கியங்களைப்புரட்டிப் பார்ப்போமானால் மலரை ஒவ்வொரு புலவரும் எவ்வாறெல்லாம் பெயர் கொடுத்து கொண்டாடி வந்துள்ளனர் என்ற உண்மை புரியும்.
பருவத்திற்கு ஒரு பெயர் கொண்ட தனித்தன்மையால்தான் தமிழுக்கு கன்னித்தமிழ் என்ற பெயர் வந்ததோ?
அரும்பு என்பது நமக்குத் தெரியும். இதழ் விரிப்பதற்கு முந்தைய பருவம் அரும்பு.
அரும்பு தெரியாதவர் ஒருவரும் இருக்க முடியாது. பூக்கடைக்குப் போனால் அரும்பாகக்கொடுங்க என்று கேட்டு வாங்கியிருப்போம்.
இந்த அரும்பிலும் மூன்று உட்பிரிவுகள் உண்டு.
நனை , முகை ,மொக்குள்.என்பன அரும்பின் மூன்று நிலைகளாம்.
அவற்றை எப்படி கண்டறிவது என்ற கேள்வி எழலாம்.
நனை : என்பது உள்ளும் புறமும் ஒருவித ஈர நைப்புள்ள தேன் நனைப்புடன் காணப்படம் நிலை நனை எனப்படும்.
முகை : முகை என்பது முகிழ்த்தல் அதாவது சற்று புடைத்தல்.
மொக்குள் : என்பது மணம் பெறும் நிலை.
இவை எந்த மொழியிலும் இல்லாத சிறப்பு! நினைக்கும்தோறும் உள்ளத்தில் மேலிடும் உவப்பு!
அரும்புக்கு துளிர்த்தல், முளைத்தல், தோன்றுதல் என்ற மூன்று பொருள் உண்டு.
.
இப்போது பூவின் ஏழுநிலைகள் மற்றும் அவற்றின்
பெயர்களைப் பற்றி அறிந்து கொள்வோம்.
பூவின் ஏழு நிலைகள்
பூக்கும் பருவத்தின்
முதல் நிலை - அரும்பு
மொக்குவிடும் நிலை - மொட்டு
முகிழ்க்கும் நிலை - முகை
பூவாகும் நிலை - மலர்
மலர்ந்த இதழ் விரிந்த நிலை - அலர்
வாடும் நிலை - வீ
வதங்கிக் கிடக்கும் நிலை - செம்மல்
இவை பூவின் ஏழு நிலைகளுக்குமான
ஏழு பெயர்களாகும்.
பூவின் பருவநிலையை நுட்பமாக
உற்று நோக்கி
மேலும் சில பெயர்கள் கொடுத்திருக்கும்
தகவல்களையும் சங்க
இலக்கிய பாடல்கள்
மூலமாக நம்மால் அறிய முடிகிறது.
அவ்வாறு பெறப்பட்ட தகவல்கள்மூலம்
பூவிற்கு பதின்மூன்று பெயர்கள்
தந்துள்ளமையை அறிய முடிகிறது.
அவற்றிற்கான விளக்கங்கள் இதோ:
அரும்பு - அரும்பும் நிலை
நனை - அரும்பு வெளியில்
தலை காட்டும் நிலை
முகை - தலைகாட்டிய நனை
முத்தாக மாறும் நில
மொக்குள் - பூவுக்குள் பருவமாற்றமான
நாற்றம் அதாவது
மணம் பெறும் நிலை.
மொக்குள் பருவத்தில்தான் பூவில்
மணத்தைக் கொடுக்கும்
மாற்றங்கள் நடைபெறும்.
முகிழ் - மணம் கொண்டு
முகிழ்தல்
அதாவது விரிந்தும் விரியாமலும்
இருக்கும் நிலை முகிழ்.
போது - மொட்டு மலரும்போது
ஏற்படும் புடைப்பு நிலை
மலர் - மலரும் பூ
அதாவது மலர்ந்த நிலை
பூ- முழு இதழ்களும்
விரிந்த நிலையில்
பூத்திருக்கும் மலர்
வீ - உதிரும் நிலையில் இருக்கும் பூ
பொதும்பர் - பூக்கள் பூத்துக்குலுங்கி நிற்கும் நிலை
பொதும்பர்
பொம்மல் - உதிர்ந்து கிடக்கும் பூ
செம்மல் - உதிர்ந்த பழம் பூ
செந்நிற மாற்றம் பெற்று
அழுகும் நிலைதான்
செம்மல்.
அரும்பு ,நனை ,முகை, மொக்குள்,
முகில், மொட்டு,
போது, மலர் , பூ , வீ ,
பொதும்பர் , பொம்மல் ,
செம்மல் என்று பதின்மூன்று
பெயர்கள் .
அப்பப்பா ....இத்தனை பெயர்களா?
இதற்கே வியந்து போனால் எப்படி....
புலவர்கள் அவற்றைக் கையாண்ட விதத்தை
வாசிக்கும் தோறும் நமக்குள் ஒரு
பெருமிதம் ஏற்படுகிறது.
"காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலரும் இந் நோய் "
என்ற திருக்குறளில் ,
காதல் காலையில் அரும்பும்.
பகல் ஆக ஆக அரும்பு மலர்ந்து போது என்ற நிலையில்
ஏற்படும் புடைப்பு நிலையைப்போல
சற்று அதிகரிக்கும்.
மாலை ஆகியதும் முழு மலராக
மலர்ந்து மகிழ்ச்சி தருவதுபோல
இன்பம் தரும் என்கிறார் வள்ளுவர்.
எப்படி ஒரு கற்பனை பாருங்கள்.!
அரும்பு , போது , மலர் என்ற பூவின்
மூன்று நிலைகளையும் ஒரே பாடலில் கூறி
அவற்றின் சிறுசிறு வேறுபாடுகளைக்
காதலோடு கவினாக பிணைத்து
அறிய வைத்துள்ள பாங்கு திருவள்ளுவரைத்
தவிர வேறு யாரால் கூடும்?
திருவள்ளுவர் இயற்கை ஆர்வலராக
இருப்பாரோ?
" முகைமொக்குள் உள்ள நாற்றம்போல் பேதை
நகைமொக்குள் உள்ளதொன்று உண்டு "
திருக்குறள் _1274
பூ பருவ மாற்றம் அடைந்து சற்று
புடைத்துக்கொண்டு வரும்போது அதற்குள்
மணம் உருவாதல் போல
காதலியின் புன்முறுவல் தோற்றத்தில்
காதல் மிகும் என்ற ஒரு குறிப்பு உண்டு
என்கிறார் வள்ளுவர்.
இங்கே காதலியின்
புன்முறுவலுக்கு முகைமொக்குள்
பருவத்தை உவமையாகக் கூறியுள்ளது
நோக்கத்தக்கது.
முகை, மொக்குள் என்ற பூவின்
பருவநிலைகள் மணத்திற்கானது
என்பதை இந்தக் குறள் மூலம்
திருவள்ளுவரும் உறுதி செய்துள்ளார்.
பூவின் ஒவ்வொரு நிலையையும்
உற்று நோக்கி எழுதியுள்ளமையால்
திருவள்ளுவர் தான் ஓர்
இயற்கை ஆர்வலர் என்பதை
மெய்ப்பித்துள்ளார்.
பூவின் இந்த ஏழு படிநிலையை
உற்று நோக்கிய தமிழர்கள்
மனிதர்களின் வளர்ச்சி பருவத்தையும்
இதனை ஒட்டியே ஏழு பருவங்களாக
அமைத்தனர் எனக் கொள்ளலாம்.
பெண்களுக்கு பேதை பெதும்பை, மங்கை,
மடந்தை , அரிவை ,தெரிவை ,
பேரிளம் பெண் என்ற
ஏழு பருவப் பெயர்கள் உள்ளன.
ஆண்களுக்கு அதற்கு இணையாக
பாலன் , மீளி., மறலோன் ,
திறலோன், காளை ,விடலை ,
முதுமகன் என்று வயதின் அடிப்படையில்
ஏழு பருவப்பெயர்கள் கொடுக்கப்
பட்டுள்ளன.
பூக்கள் பற்றிய மேலும் சில தகவல்கள்
இதோ:
சில மலர்கள் இரவில் மலரும்.
சில பகலில் மலரும்.
இரவில் மலரும் மலர்கள்
பெரும்பாலும் வெண்மை நிறமும்
மணம் மிகுந்தவையாகவும் இருக்கும்.
அவ்வாறு இருப்பதால்தான்
வண்டுகளால் எளிதாக பூவின்
இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க முடியுமாம்.
மகரந்த சேர்க்கை நடைபெற
இது உதவியாக இருக்குமாம்.
கள்ளிப்பூக்கள் இரவில்தான் மலருமாம்.
இருள்நாறிப் பூ.
இது நள்ளிருள் நாறி
எனப்படுகிறது.
இருவாச்சிப்பூ என்று நம்மால்
அறியப்பட்ட பூ இந்த இருள்நாறிப் பூ.
சில ஊர்களில் இதனை இருவாட்சிப் பூ
என்றும் சொல்லுவர்.
ஆவிரைப்பூ என்று ஒரு பூ உண்டாம்.
நாம் அறிந்த ஆவாரம் பூ என்பதுதான்
ஆவிரைப் பூ என்றும் அறியப்படுகிறது.
இதற்கு மேகாரி என்று
மற்றுமொரு பெயரும் உண்டாம்.
மொழியின் உயர்வு மக்கள் அதனை எவ்வாறு
பயன்பாட்டிற்கு கொண்டு வருகின்றனர்
என்பதில்தான் உள்ளது.
பூவுக்கு இத்தனை பெயர்கள் இருந்தும்
நாம் அதனைப் பயன்படுத்துகிறோமா....?
வேறு எந்த மொழியிலாவது
பூவாக மலரும் பருவத்திற்கு இத்தனை
பெயர்கள் இருக்க முடியுமா?
எவ்வளவு வளமான சொற்களைக்
கொண்ட மொழி நம் தமிழ் மொழி!
அதனை நாமும் பயன்படுத்தித்தான்
பார்ப்போமே!
இலக்கியம் பூவின் ஏழு பருவ நிலைகள்
No comments: